Enable Javscript for better performance
ஸ்ரீரங்கம்: வேட்புமனு தாக்கல் நிறைவு மொத்தம் 46 பேர் மனு- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீரங்கம்: வேட்புமனு தாக்கல் நிறைவு மொத்தம் 46 பேர் மனு

    By dn  |   Published on : 28th January 2015 03:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    candidate

    ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. கடைசி நாளான செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்த 29 பேருடன் சேர்த்து மொத்தம் 46 பேர் களத்தில் உள்ளனர்.

    ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 13-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது. சனிக்கிழமை வரை அதிமுக, திமுக, பாஜக வேட்பாளர்கள் என 17 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். ஞாயிறு, திங்கள்கிழமை (குடியரசு தினம்) விடுமுறை தினம் என்பதால், செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்ய அதிக அளவில் வேட்பாளர்கள் ஆர்வம் காட்டினர்.

    ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் க. அண்ணாதுரை, தமிழ்நாடு தேவேந்திரர் குல கூட்டமைப்பின் எஸ்.எம். சேட்டு உள்ளிட்ட 21 பேரும், கோட்டாட்சியர் அலுவலகத்தில் பாஜக மாற்று வேட்பாளர் ப.பார்த்திபன் உள்ளிட்ட 8 பேரும் என மொத்தம் 29 பேர் மனு தாக்கல் செய்தனர். இத்தொகுதியில் இதுவரை போட்டியிட வளர்மதி (அதிமுக) , ஆனந்த் (திமுக), சுப்பிரமணியம் (பாஜக), அண்ணாதுரை (மார்க்சிஸ்ட்) உள்பட 46 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை புதன்கிழமை நடைபெறுகிறது. மனுக்களை திரும்ப பெற்றுக் கொள்வதற்கு ஜனவரி 30-ஆம் தேதி கடைசி நாளாகும். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்.

    பரபரப்பான வட்டாட்சியர் அலுவலகம்: மனு தாக்கல் செய்ய கடைசி நாளான செவ்வாய்க்கிழமை ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகம் பரபரப்பாகக் காணப்பட்டது. பிற்பகல் 3 மணி வரைதான் மனு தாக்கல் செய்ய முடியும் என்பதால், பிற்பகல் 2 மணிக்கு மேல் வட்டாட்சியர் அலுவலகம் வந்து டோக்கன் பெற்றவர்கள் மாலை 6 மணி வரை தங்களின் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai