
சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி கோயில் மகா சம்ப்ரோஷண விழாவில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.
108 திவ்ய தேசங்களில் முக்கியமான திருத்தலமான திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி கோயிலில் மகா சம்ப்ரோக்ஷண விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடந்த ஆண்டு ஜனவரி முதல் நடைபெற்று வந்த புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மகா சம்ப்ரோஷண விழா நிகழ்ச்சிகள் கடந்த 8-ஆம் தேதி பூஜைகளுடன் தொடங்கின.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகா சம்ப்ரோக்ஷணத்தைக் காண, சென்னை மட்டுமன்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர்.
கோயிலைச் சுற்றியுள்ள நான்கு மாட வீதிகள், அருகில் உள்ள வீடுகளின் மேல்தளத்திலும் பக்தர்கள் குவிந்திருந்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆங்காங்கே கண்காணிப்புக் கோபுரங்கள் அமைத்து, சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது.
ஜீயர்கள் பங்கேற்பு: இந்த மகா சம்ப்ரோக்ஷணத்தில் திருக்குறுங்குடி ஸ்ரீ பேரருளாள ராமானுஜ ஜீயர், ஆழ்வார் திருநகரி எம்பெருமானார் ஜீயர் ஆகியோர் பங்கேற்றனர். காலை 3 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு யாகசாலை, திவ்யபிரபந்த கோஷ்டி துவக்கம் ஆகியவற்றைத் தொடர்ந்து, 6 மணிக்கு யாக சாலையில் திருக்கோயில் பிரதான அர்ச்சகர் வி.ஆர்.பார்த்தசாரதி பட்டாச்சாரியர் தலைமையில் அனைத்து குண்டங்களுக்கும் பூர்ணாகுதி நடைபெற்றது.
பின்னர் புனித நீர் உள்ளடக்கிய கலசங்களும் எம்பெருமான்களும் திருக்கோயில் பிரகாரத்தில் வலம் வந்து புனித நீர்க் கலசங்கள் விமானங்களுக்குச் சென்றடைந்தன.
ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி உள்ளிட்ட அனைத்து எம்பெருமான்களும் அவரவர் சந்நிதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
சரியாக 7.45 மணிக்கு இந்து சமய அறநிலையத் துறைச் செயலர் (கூடுதல் பொறுப்பு) மு.ராசாராம், ஆணையர் மா.வீரசண்முகமணி ஆகியோர் பச்சைக்கொடி அசைக்க, ராஜகோபுரத்துக்கும் அனைத்து விமானங்களுக்கும் மகா சம்ப்ரோக்ஷணம் விமரிசையாக நடைபெற்றது. அப்போது அங்கு குவிந்திருந்த பக்தர்கள் "கோவிந்தா' என்று பக்திப் பரவசத்துடன் கோஷமிட்டனர்.
அதன்பிறகு சந்நிதிகளின் மூலவர் திருமேனிகளுக்கு பிராணப் பிரதிஷ்டை நடைபெற்று, திவ்ய பிரபந்த கோஷ்டி சாற்றுமறை நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டது.
மாலை 4 மணிக்கு ஸ்ரீ சீதாலட்சுமி சகிதமாக ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் வீதியுலா வந்தார். பிறகு 6 மணியளவில் ஸ்ரீ வேதவல்லி தாயார், ஸ்ரீ மன்னாத சுவாமி திருக்கோயில் வளாகத்தில் உள்புறப்பாடு நடைபெற்றது.
இரவு 8 மணிக்கு ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார்கள், ஸ்ரீ ஆண்டாள், ஆச்சார்யர்கள் ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஆகியோர் நான்கு மாட வீதிகள் புறப்பாடு கண்டருளி 11 மணியளவில் சன்னிதியை அடைந்தனர்.
இவ்விழாவில் சிறப்பு அம்சமாக ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி ஸ்ரீ பாதம் அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. பக்தர்கள் அனைவரும் சிரமமின்றி விரைவாக சுவாமி தரிசனம் செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
சிறப்பு விருந்தினர்களாக சென்னை மேயர் சைதை துரைசாமி, அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம், சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், மக்களவை உறுப்பினர் விஜயகுமார், மாநிலங்களவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட பிரமுகர்கள் சம்ப்ரோக்ஷண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அறநிலையத் துறை சார்பில் கூடுதல் ஆணையர் (திருப்பணி) ம.கவிதா, கூடுதல் ஆணையர் (பொது) திருமகள், இணை ஆணையர்கள் ஏ.டி.பரஞ்சோதி, சுதர்சனம், துணை ஆணையர் பெ.கோதண்டராமன், திருக்கோயில் அலுவலர்கள் விழா ஏற்பாடுகளை செய்தனர். மகா சம்ப்ரோக்ஷணம் நிறைவடைந்த பின்னர் மூலவரைக் காண பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் வழிபட்டனர். சனிக்கிழமை முதல் 12 நாட்களுக்கு மண்டலாபிஷேக பூஜை நடைபெற உள்ளது.
சிறப்பு ஏற்பாடுகள்: சம்ப்ரோக்ஷணத்தையொட்டி கோயில் நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தது. சம்ப்ரோக்ஷண விழாவை பக்தர்கள் நேரடியாக காணும் வகையில் கோயில் வளாகத்துக்கு வெளியே இரண்டு இடங்களில் ராட்சதத் திரைகள் அமைக்கப்பட்டிருந்தன.
2000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பக்தர்களின் வசதிக்கான மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.