Enable Javscript for better performance
பகலில் பள்ளி; இரவிலோ வாகன நிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    பகலில் பள்ளி; இரவிலோ வாகன நிறுத்தம்

    Published on : 07th March 2015 05:48 AM  |   அ+அ அ-   |    |  

    bus_stand

    குன்றத்தூரில் மதில் சுவர் இடிந்து விழுந்த அரசுப் பள்ளியின் வளாகம் இரவு நேரத்தில் வாகன நிறுத்தும் இடமாகவும், மது அருந்தும் கூடமாகவும் மாறி வருகிறது.

    குன்றத்தூரில் கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் தமிழறிஞர் சேக்கிழார். இவரைச் சிறப்பிக்கும் வகையில் குன்றத்தூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சேக்கிழார் மேல்நிலைப் பள்ளி என பெயர் சூட்டப்பட்டது.

    இங்கு குன்றத்தூர், கொல்லச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 1620 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

    மதில் சுவர் பழுதால் நுழையும் சமூக விரோதிகள்

    இந்த நிலையில், இந்தப் பள்ளியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள மதில் சுவர் பழுதடைந்து பல இடங்களில் உடைந்து கீழே விழுந்து வருகிறது. இதனால் இரவு நேரத்திலும், விடுமுறை நாள்களில் பள்ளியின் வளாகத்தின் உள்ளே செல்லும் மர்ம நபர்கள் வகுப்பறைக் கதவுகள், ஜன்னல்கள், மழைநீர் சேகரிப்புக் குழாய்களை உடைத்து சேதப்படுத்தி வருகின்றனர்.

    மேலும் இரவு நேரத்தில் மது அருந்தியும், பள்ளி வளாகத்தில் பழுதடைந்து பயன்படுத்தாமல் உள்ள வகுப்பறையினுள் சென்று சமூக விரோதச் செயல்களிலும் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

    மாணவர்கள் வெளியே, சமூக விரோதிகள் உள்ளே!

    இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளியின் முன்பக்கம் உள்ள மதில் சுவரும் இடிந்து தரைமட்டமானது. இந்தப் பள்ளியின் அருகே உள்ள சில தனியார் திருமண மண்டபங்களுக்கு வரும் தனியார் நபர்கள் தங்கள் வாகனங்களை இரவு நேரத்தில் உடைந்து போன மதில் சுவர் வழியைப் பயன்படுத்தி பள்ளியின் வளாகத்தின் உள்ளே நிறுத்தி வைக்கின்றனர்.

    மேலும், பள்ளி நேரத்தில் மாணவர்கள் இந்த வழியைப் பயன்படுத்தி சாலைக்கு வந்து விடுகின்றனர்.

    இதேபோல், உடைந்து போன வழியைப் பயன்படுத்தி நாய், ஆடு, மாடு போன்ற கால்நடைகள் பள்ளி வளாகத்துக்குள் சுதந்திரமாக சுற்றித் திரிவது மட்டுமன்றி, மாணவர்களை அச்சுறுத்தியும் வருகின்றன.

    பழுதடைந்து விரிசல் விட்டு காணப்படும் மீதமுள்ள மதில் சுவர் எந்த நேரத்திலும் இடிந்து மாணவர்கள் மீது விழக் கூடிய ஆபத்து உள்ளது.

    எனவே பழைய மதில் சுவரை அகற்றி புதிய மதில் சுவரை கட்ட வேண்டும். அதேபோல் பழுதடைந்து பயன்பாடு இல்லாமல் உள்ள 3 வகுப்பறைகளையும் இடித்து அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp