சுடச்சுட

  

  மாட்டுக்கறி உணவுத் திருவிழா நடத்த முயன்ற எழுத்தாளர்கள் மீது போலீஸார் தாக்குதல்

  By  திருவண்ணாமலை,  |   Published on : 02nd November 2015 02:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  45

  திருவண்ணாமலையில் தடையை மீறி மாட்டுக்கறி உணவுத் திருவிழா நடத்த வந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தினர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகளை போலீஸார் கடுமையாகத் தாக்கி, கைது செய்தனர்.
   தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை மாட்டுக்கறி உணவுத் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
   திருவண்ணாமலை அண்ணா சிலை எதிரே இந்த திருவிழா நடைபெறுவதாக இருந்தது. இந்த திருவிழாவுக்கு போலீஸார் தடை விதித்திருந்தனர்.
   இருப்பினும் தடையை மீறி திருவிழா நடத்த முடிவு செய்த நிர்வாகிகள், மாலை 4.30 மணிக்கு பெரியார் சிலை எதிரே திரண்டனர். அங்கிருந்து அண்ணா சிலை நோக்கிச் செல்ல அவர்கள் முயன்றனர். அங்கு, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நகர டிஎஸ்பி சரவணகுமார் தலைமையிலான போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
   எனவே, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ்.கருணா, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன் உள்ளிட்ட நூறுக்கு மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
   பின்னர், அவர்கள் அதே இடத்தில் மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட்டனர். அவர்களை போலீஸார் தடுத்து, கைது செய்ய முயன்றனர். வேனில் ஏற மறுத்தவர்களை வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றினர்.
   அப்போது, ஏடிஎஸ்பி ரங்கராஜன் தலைமையில் வந்த போலீஸார் போராட்டக்காரர்கள் மீது வன்முறையைப் பிரயோகித்து கைது செய்தனர். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
   செல்போன் பறிமுதல்: போலீஸாரின் கைது நடவடிக்கையின்போது பத்திரிகையாளர்கள் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது நிருபர் ஒருவரது செல்லிடப்பேசியை போலீஸார் பறித்தனர்.
   அதனால் கோபமடைந்த பத்திரிகையாளர்கள், ஏடிஎஸ்பியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து, செல்லிடப்பேசியை போலீஸார் திரும்ப ஒப்படைத்தனர்.
   70 பேர் கைது: இதனிடையே, மாட்டுக்கறி உணவுத் திருவிழா நடத்த வந்து கைதான 55 பேர், உணவுத் திருவிழாக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி சதீஷ்குமார் தலைமையிலான 15 பேர் உள்பட மொத்தம் 70 பேரும் கைது செய்யப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு விடுவிக்கப்பட்டனர்.
  அனுமதி ரத்துக்கு ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம்
   சென்னை, நவ. 1: மாட்டுக்கறி உணவு சாப்பிடும் நிகழ்ச்சிக்கான அனுமதியை காவல் துறை ரத்து செய்துள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
   இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: திருவண்ணாமலை பெரியார் சிலை அருகே நிகழ்ச்சி நடத்த கூடியிருந்தவர்களிடம் நிகழ்ச்சிக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் கூறினர்.
   "தமிழ்நாட்டில் விரும்பியதைச் சாப்பிடுவதற்குக் கூட உரிமையில்லையா? மாட்டுக்கறி உணவு தடை செய்யப்பட்டுள்ளதா?' என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.
   அதை ஏற்க மறுத்த காவல் துறையினர், நிகழ்ச்சிக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறினர். பின்னர் நிர்வாகிகளை வலுக்கட்டாயமாகப் பிடித்து தள்ளி அராஜகமான முறையில் கைது செய்துள்ளனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நரேந்திர மோடி ஆட்சியில் கருத்துரிமையும், உணவு உரிமையும் பறிக்கப்படும் நிலையில், தமிழகத்திலும் இந்த போக்கு தலைதூக்குவது ஆபத்தான அறிகுறி. எனவே, கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai