Enable Javscript for better performance
தேச நலனுக்காக எந்த கட்சி அழைத்தாலும் பங்கெடுப்பேன்:கமல்ஹாசன்- Dinamani

சுடச்சுட

  

  தேச நலனுக்காக எந்த கட்சி அழைத்தாலும் பங்கெடுப்பேன்:கமல்ஹாசன்

  By சென்னை  |   Published on : 08th November 2015 03:29 AM  |   அ+அ அ-   |    |  

  kamalhasan

  தேச நலனுக்காக எந்த கட்சி அழைத்தாலும், அதில் பங்கெடுப்பேன் என்றார் நடிகர் கமல்ஹாசன்.

  தனது பிறந்த நாளையொட்டி, சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், நல உதவிகளை வழங்கி கமல்ஹாசன் பேசியதாவது:

  இது கைகளைத் தட்டி பாராட்டும் விழா மட்டுமல்ல. நாம் செய்ய வேண்டிய கடமைகளை மீண்டும் நினைவுப்படுத்திக் கொள்ளும் விழா. விழாக் காலங்களில் என்னை மரியாதை செய்வதாக நினைத்து ரசிகர்கள் செய்யும் அன்பு காணிக்கைகள் எல்லாம் சமூகச் சேவைகளுக்கே என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

  அரசியல் பாதைக்கு செல்ல மாட்டேன்: 5 ஆண்டுகளுக்கு முறை என்னை நோக்கி அரசியல் கேள்விகள் எழுப்பபடுகின்றன. வந்தால் சௌகரியமாக இருக்கும் அதன் மூலம் பயணப்படலாம் என நினைப்பவர்கள்தான் இந்தக் கேள்வியை எழுப்புகிறார்கள். நான் வேறு வண்டி. அரசியல் பாதைக்குச் செல்ல மாட்டேன். யாரும் என்னை நம்பி ஏற வேண்டாம். மீறி ஏறினால் வண்டியை நிறுத்தி இறக்கி விட்டு விட்டுதான் போவேன்.

  5 ஆண்டுகளுக்கு முறை விரல்களை கறையாக்கி கொள்கிறேனே. அந்த கறை போதும். தேச நலனுக்காக எந்தக் கட்சி அழைத்தாலும் அதில் பங்கெடுப்பேன்.

  சில நேரங்களில் என் நேர்மையைப் பார்த்து கேள்வி கேட்கிறார்கள். என் நடிப்பை பற்றி கேட்டால் அடுத்த படத்தில் திருத்திக் கொள்கிறேன் என சொல்லி விடுவேன். ஆனால் என் நேர்மையின் மீது கேள்விகள் வேண்டாம். நிறைய ரத்த காயங்கள் பட்டுத்தான் இந்த நேர்மையைப் பழகியிருக்கிறேன்.

  பகுத்தறிவைக் கிண்டலடிக்க வேண்டாம்: என்னிடம் இப்போது இருக்கும் பகுத்தறிவு அரசியல் வாயிலாக வந்தல்ல. ஏனென்றால் அரசியல் மூலம் சொல்லும் எந்த பகுத்தறிவுக்கும் உள்கருத்து இருக்கும். என் பகுத்தறிவு சுயமானது. அதனால் என் பகுத்தறிவைக் கிண்டலடிக்க வேண்டாம்.

  சகிப்புத்தன்மை பற்றி இப்போது பேசப்பட்டு வருகிறது. எத்தனையோ ஆண்டுகளாக பகுத்தறிவு பெரியோர்கள் இங்கே சகிப்புத்தன்மையுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். அது இல்லாதவர்கள்தான் கோயிலை இடிப்பேன் என்பார்கள். பகுத்தறிவாளர்கள் அதை செய்ய மாட்டர்கள்.

  அன்பை மிருகங்களுக்கு காட்டி பலனில்லை: நான் நாத்திகன் அல்ல. பகுத்தறிவாளன். நாளைக்கே சக்தி மிக்க சாமியார் தெய்வத்தை என் முன் நிறுத்தி விட்டால், "கைக் குலுக்கி வரவேற்பேன். வணங்க மாட்டேன். செய்வதாக சொன்ன வாக்குறுதிகளையெல்லாம் ஏன் நிறைவேற்றவில்லை' என கேள்வி கேட்பேன். தெய்வங்கள் இருந்து விட்டு போகட்டும். உங்களுக்கு மாட்டு இறைச்சி பிடிக்கவில்லை என்றால் சாப்பிடாதீர்கள். அதை ஏன் சாப்பிடக் கூடாது என்பதற்கு மருத்துவ ஆதாரங்கள் இருக்கின்றன. அதனால் நீங்கள் சாப்பிடாமல் இருக்கிறீர்கள். அதைக் கூட சாப்பிட வழியில்லாமல் நாட்டில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். முதலில் அதை கவனியுங்கள். மனிதர்களுக்கு காட்டக் கூடிய அன்பை, மிருகங்களுக்கு காட்டி பயன் இல்லை.

  "சகிப்புத் தன்மை இல்லை': சகிப்புத்தன்மை இந்த நாட்டில் இல்லை என்பதற்கு பெரிய உதாரணம் பாகிஸ்தான்.

  நம்முடன் இருக்க வேண்டிய சகோதரனை பிரித்து வேறு வீடு கட்டி கொடுத்து விட்டோம். எவ்வளவு பெரிய நாட்டை பங்கு பிரிவினை போட்டு கொடுத்து விட்டோம் என்பதை நாம் உணர வேண்டும். மீண்டும் அது போன்ற நிகழ்வுகளை நிகழ விடக் கூடாது என்றார்.

  விழாவில் கவிஞர் புவியரசு, தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், எழுத்தாளர் சுகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  "விருதுகளைத் திருப்பி கொடுத்து அவமதிக்க மாட்டேன்'

  விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது:

  விருதுகளைத் திருப்பிக் கொடுக்க மாட்டேன் என்று சொன்னது குறித்து பேசுகிறார்கள். விருதுகளைக் கொடுத்து விட்டால் அது எதிர்ப்பாகி விடுமா? காந்தி வெள்ளைக்காரர்களிடம் வாங்கிய வக்கீல் பட்டத்தை திருப்பி அனுப்பியிருந்தால், வாதாட வேண்டிய வழக்குகளில் வாதாட முடியாமல் போயிருக்கும்.

  எனக்கு விருது மூலம் கொடுக்கப்பட்ட மரியாதை அரசு கொடுத்தல்ல. அது அறிஞர்கள் கொடுத்தது. அவர்களை நான் அவமதிக்க மாட்டேன். சகியாமைக்கு எதிரான குரல்தான் இதுவும் கூட. எங்களின் சுதந்திரம் பறிபோகும் என்ற சந்தேகம் வரும் போதெல்லாம் இந்தக் குரல் எழும் என்றார் கமல்ஹாசன்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai