Enable Javscript for better performance
காஞ்சிபுரத்தில் வெள்ளத்தில் சிக்கிய 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்பு: மாவட்ட ஆட்சியர் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    காஞ்சிபுரத்தில் வெள்ளத்தில் சிக்கிய 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்பு: மாவட்ட ஆட்சியர் தகவல்

    By dn  |   Published on : 17th November 2015 03:53 PM  |   அ+அ அ-   |    |  

    காஞ்சிபுரத்தில் வெள்ளத்தில் சிக்கிய 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படகுகள் மூலமாக மீட்கப்பட்டதாக அம்மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி கூறியுள்ளார்.

    இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி, தாம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலை துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் டிகே.எம்.சின்னையா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 90 படகுகள் மூலம் 10067 நபர்கள் மீட்கப்பட்டனர்,  மாவட்டம் முழுவதும் 34,426 நபர்கள் 116 முகாம்களில் பாதுகாப்பாக உள்ளனர் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.கஜலட்சுமி தெரிவித்துள்ளார்.

    காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து, நிவாரண பணிகளை மேற்கொள்ள முதல்வரின் உத்தரவின்படி, காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளான வரதராஜபுரம், அபிபுல்லா நகர், மகாலட்சுமி நகர், தாம்பரம் 32வது வார்டு பகுதி திருமுடிவாக்கம், முடிச்சூர் பிடிஓ காலனி, பாரதி நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெள்ளம் மற்றும் நீர்சூழ்ந்த பகுதிகளில் சிக்கியவர்களை மீட்பதற்காக, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலை துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் டிகே.எம்.சின்னையா மற்றும் அரசு செயலாளர்கள்,  காஞ்சிபுரம் மாவட்டத்தின் வெள்ள நிவாரண பணிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்ட சிறப்பு கண்காணிப்பாளர் - டாக்டர்.கே.ராஜாராமன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் இரா.கஜலட்சுமி, ஆகியோருடன் இணைந்து கண்காணிப்பு பணி மேற்கொள்ள தமிழக முதலமைச்சர் அவர்களால் நியமனம் செய்யப்பட்டுள்ள ஏழு மூத்த அரசு உயர் அலுவலர்கள் தாம்பரத்தில் முகாமிட்டு கடந்த இரண்டு நாட்களாக பணிகளைத் துரிதப்படுத்தி வருகிறார்கள்.

    அரசுத்துறை அலுவலர்கள் நான்கு குழுக்களாக பிரிந்து உடனடியாக போர்க்கால அடிப்படையில் வெள்ளத்தினாலும் நீர்சூழ்ந்த பகுதிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளை துரிதப்படுத்தி, வெள்ளத்தில் சிக்கி உள்ள பொதுமக்களை மீட்பதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் மீட்கப்பட்டவர்களுக்கு தரமான உணவு, குடிநீர், உடை, தேவைக்கேற்ப மருத்துவ சிகிச்சை அளிக்கவும், பாதுகாப்பான தங்கும் முகாம் அமைத்து, மருத்துவ முகாம் அளித்து மருத்துவர் சிகிச்சை அளித்திட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்கள். தாம்பரம் டாக்டர். அம்பேத்கார் திருமண மண்டபத்தில் பேரிடர் மீட்பு குழுவினருக்காக தயாரிக்கப்பட்டு வரும் உணவு தரமாக உள்ளதா என்றும் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

    கடந்த இரண்டு நாட்களாக தாம்பரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழையினால் பாதிக்கப்பட்டு அவதியுற்ற பொதுமக்களை நகராட்சி நிர்வாகம், கடலோர காவல் படை, தேசிய இடர்பாடுகள் மீட்புப்படை, மாநில இடர்பாடுகள் மீட்புத்துறை, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், இந்திய ராணுவ மீட்புத் துறை, கடற்படையினர், விமானப்படையினர், மீன் வளத் துறையினர் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    90 படகுகளைக் கொண்டு 553 மீட்புக்குழு பணியாளர்கள் மூலம் 10 ஆயிரத்து 67 நபர்களை மிகவும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் இதுவரை 34 ஆயிரத்து 426 நபர்கள் மழை வெள்ள பாதிப்பிலிருந்து மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அரசு பாதுகாப்பு முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள 116 முகாம்களில் மருத்துவ உதவிகள் மற்றும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    மேற்கண்ட ஆய்வுகளின் போது பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 7 நபர்களுக்கு தலா ரூ.4 இலட்சம் வீதம் ரூ.28 இலட்சம் நிவாரண உதவியாக அமைச்சர்களால் வழங்கப்பட்டுள்ளது என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.கஜலட்சுமி  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai