வேணு கானத்துக்கு விடை (1934 - 2015)

"புல்லாங்குழல் என்றால் ரமணி' என்கிற வகையில் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக கர்நாடக இசை உலகில் தடம் பதித்தவர் அவர்.
வேணு கானத்துக்கு விடை (1934 - 2015)

பிரபல புல்லாங்குழல் இசை மேதை என். ரமணி வெள்ளிக்கிழமை காலமானார்.
 "புல்லாங்குழல் என்றால் ரமணி' என்கிற வகையில் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக கர்நாடக இசை உலகில் தடம் பதித்தவர் அவர்.
 கர்நாடக இசையின் மும்மூர்த்திகள் அவதரித்த சங்கீத திருத்தலமான திருவாரூரில் 1934-இல் பிறந்த ரமணி, தனது 81-ஆம் வயதில் சென்னையில் காலமானார்.
 அவருக்கு மனைவி, இரு மகன்கள், இரு மகள்கள் உள்ளனர்.
 கர்நாடக இசைக்கு அவர் அளித்த பெரும் பங்களிப்பைப் பாராட்டி அவர் குவித்த விருதுகள் ஏராளம். சங்கீத கலாநிதி, இசைப் பேரறிஞர், சங்கீத சூடாமணி உள்ளிட்ட உயரிய இசைத் துறை விருதுகள் அவருக்கு அளிக்கப்பட்டன.
 பத்மஸ்ரீ விருது அளித்து இந்திய அரசு அவரைக் கெüரவித்தது. தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.
 தனது 4-ஆவது வயதில், தாத்தா ஆழியூர் நாராயணஸ்வாமி ஐயரிடம் முதலில் இசை பயின்றார் ரமணி.
 புல்லாங்குழல் வாசிப்பு மட்டுமல்லாமல், பிரபல இசைக் கலைஞரான தாத்தாவை சந்திக்க வரும் இசை மேதைகளின் அனுபவங்களையும் நுணுக்கங்களையும் மனதில் வாங்கிக் கொண்டார் ரமணி.
 பின்னர் புல்லாங்குழல் இசை மேதை டி.ஆர். மகாலிங்கத்திடம் (மாலி) இசை பயின்றார். தாய் வழியில் மாலி அவருக்கு உறவினர் என்பது குறிப்பிடத் தக்கது.
 சென்னையில் வசித்து வந்த மாலி, திருவாரூருக்கு வரும்போதெல்லாம் ரமணியின் தாத்தா நாராயணஸ்வாமியை சந்திக்க வருவது வழக்கம்.
 மிகச் சிறிய வயதிலேயே ரமணியின் இசைத் தேர்ச்சியை அறிந்து கொண்ட மாலி, சென்னைக்கு வந்து தன்னிடம் பயில அழைத்தார்.
 திருவாரூரில் பள்ளிக்கூடத்தில் படித்து வந்த ரமணி, விடுமுறைக் காலங்களில் சென்னை சென்று மாலியிடம் புல்லாங்குழல் வாசிப்பின் நுணுக்கங்களைப் பயின்று வந்தார்.
 எட்டாவது வயதில் ரமணியின் அரங்கேற்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
 அவரது 11-ஆவது வயதில், மாலியின் இசை நிகழ்ச்சியில் தன்னுடன் மேடையில் அமர்ந்து வாசிக்கும் வாய்ப்பை அளித்தார். அதன் பிறகு மாலியுடன் பல கச்சேரிகளை நிகழ்த்தினார் ரமணி. உள்ளூரிலும் அயலூர்களிலும் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சிகளை அளித்து வந்த ரமணியின் 12-ஆம் வயதில் "பால வேணு கான ரத்னம்' என்ற விருது அளிக்கப்பட்டது.
 மிகச் சிறு வயதிலேயே பல மணி நேரப் பயிற்சி மேற்கொள்ளும் வழக்கம் அவருக்கு இருந்தது. தினசரி குறைந்தது 8 மணி நேர இசைப் பயிற்சியை மேற்கொண்டு வந்தார்.
 "அந்தக் காலத்தில் மேடை கிடைப்பது கஷ்டம். முன்னுக்கு வருவதும் கஷ்டம். சங்கீத ஞானம் ஒன்றுதான் பலம்' என்று அவர் ஒரு முறை கூறினார்.
 இன்றைக்கு மிகப் பிரபலமாக உள்ள "ஜுகல்பந்தி' என்கிற ஹிந்துஸ்தானி-கர்நாடக இசை கலவை இசை முறையை 1960-களிலேயே நிகழ்த்தினார்.
 சிதார் மேதை ரவிசங்கர், ஹிந்துஸ்தானி புல்லாங்குழல் வித்வான் ஹரிபிரசாத் செüராசியாவுடன் இணைந்து ஜுகல்பந்தி நிகழ்ச்சி அளித்தார். அதன் பின்னர் 75-க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை அளித்தார்.
 "காலத்தை அனுசரித்துப் போக வேண்டும். பழையதும் வேண்டும். புதியதும் வேண்டும். இசையின் அடிப்படை இனிமை. நமது உயர்ந்த கர்நாடக இசையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்' என்று ஒரு முறை கூறிய ரமணி, தனது ரமணி புல்லாங்குழல் அகாதெமி மூலம் சுமார் ஆயிரம் மாணவர்களை உருவாக்கியுள்ளார்.
 "வாசிக்கும் நுட்பத்தைத்தான் கற்றுக் கொள்ள முடியும். ஞானத்தை நாமேதான் சம்பாதித்துக் கொள்ள வேண்டும். சங்கீதம் என்பது பிரார்த்தனை.
 என்னைப் பொருத்தவரை, 50 ஆண்டுகள் புல்லாங்குழல் வாசித்த பிறகுதான் எனக்கு சங்கீதமே பிடிபட்டது' என்று கூறியவர் ரமணி.
 நிறைகுடம். அப்படித்தான் இருக்கும்!
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com