ஊராட்சித் தலைவரை பதவி நீக்கம் செய்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த எம்.கிருஷ்ணமூர்த்தி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் மலைஜாதி வகுப்பைச் சேர்ந்தவர். கடந்த 2011-ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில், மலையனூர் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றேன். இந்த ஊராட்சியில் துணைத் தலைவராக சுந்தரம் தர்மலிங்கம் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், அமைச்சர் பழனியப்பனின் நெருங்கிய உறவினர். இவர்கள் இருவரும் என்னை ஒதுக்கி வைத்து அவமானப்படுத்தும் விதமாகச் செயல்பட்டனர். இதையடுத்து நான், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், போலீஸில் புகார் செய்தேன். இந்த புகாரை திரும்பப் பெறும்படி அமைச்சர் என்னை வற்புறுத்தினார். இதை நான் ஏற்கவில்லை.
நீதிமன்ற அவமதிப்பு: இதையடுத்து ஊராட்சி செலவுக்காக கொடுக்கப்படும் காசோலையில் கையெழுத்திட துணைத் தலைவர் மறுத்து விட்டார். இதுகுறித்து தருமபுரி ஆட்சியரிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்காததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு ஊராட்சி சட்டத்தின்படி, காசோலையில் கையெழுத்திடும் என்னுடைய அதிகாரத்தைப் பறித்து, அந்த அதிகாரத்தை வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் ஒப்படைத்தார். ஆட்சியரின் இந்த உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, தடை உத்தரவு பெற்றேன். இந்த உத்தரவை ஆட்சியர் மதிக்காததால், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடர்ந்தேன்.
இதையடுத்து பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர், பஞ்சாயத்து உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டி, என்னை தலைவர் பதவியில் இருந்து நீக்கும் முடிவை எடுத்தார். இதுகுறித்து ஆட்சியருக்கு அறிக்கையும் அனுப்பினார்.
ஆட்சியரின் உத்தரவு ரத்து: இந்த அறிக்கையின் அடிப்படையில், என்னை தலைவர் பதவியில் இருந்து நீக்கி கடந்த 2014-ஆம் ஆண்டு நவம்பர் 24-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமையாஜி, மனுதாரர் சார்பில் வழக்குரைஞர்கள் எஸ்.துரைசாமி, வி.இளங்கோவன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
இந்த வழக்கில், அதிகாரிகளின் நடவடிக்கை அனைத்தும் முறைகேடாகவும், சட்டத்தை மீறும் வகையிலும் உள்ளது. இதனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சித் தலைவர், அப்பதவியில் அமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஊராட்சித் தலைவர் பதவியில் இருந்து மனுதாரரை நீக்கி ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன் என்று நீதிபதி உத்தரவிட்டார்.