
மகா சிவராத்திரியையொட்டி, சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழாவின் 4-ஆம் நாள் நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றன.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் பொது தீட்சிதர்களின் தில்லை நாட்டிய அஞ்சலி அறக்கட்டளை சார்பில் நடைபெறும் நாட்டியாஞ்சலி விழாவும், நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 35-ஆவது ஆண்டு நாட்டியாஞ்சலி விழாவும் கடந்த 7-ஆம் தேதி தனித்தனியாக தொடங்கின. வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்து 5 நாள்கள் நாட்டியாஞ்சலி விழா நடைபெறுகிறது.
விழாவின் 4-ஆம் நாள் நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
நடராஜர் கோயிலில் சிங்கப்பூர் ஷிரஜாகோவிந்த், சென்னை ஸ்ரீநிகிதன் பைன் ஆர்ட்ஸ் மாணவர்கள், புதுச்சேரி ஸ்ரீநன்தினி நாட்டியாலயா மாணவர்கள், புதுச்சேரி ஸ்ரீசரவணன் அருள் நாட்டியாலயா மாணவர்கள் உள்ளிட்டோர் நடனமாடினர்.
ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அறக்கட்டளை வளாகத்தில் பெங்களூர் நிருத்ய ப்ரகாச வர்ஷினி பள்ளி மாணவர்கள், சென்னை டாக்டர் உமா ஆனந்த் மாணவிகளின் சிவார்ப்பணம் என்ற பரதம் உள்ளிட்டோர் நடனமாடினர்.