
திருச்சி மாவட்டம் முசிறி அருகே டெம்போ வேனும், தனியார் பொறியியல் கல்லூரி பேருந்தும் இன்று காலை 7.30 மணியளவில் நேருக்கு நேர் மோதிய பயங்கர விபத்தில் 4 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர்.
சேலம் அஸ்தம்பட்டி மணக்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் சேலத்தில் இருந்து நாகூருக்கு டெம்போ வேனில் சென்று கொண்டிருந்தனர்.
இன்று காலை 7.30 மணியளவில், திருச்சி மாவட்டம் முசிறி அருகே முன்னாள் சென்று கொண்டிருந்த காரை, டெம்போ முந்திச் செல்ல முயன்றபோது எதிரே வந்த தோழூர்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியின் பேருந்து மீது பயங்கர வேகத்தில் மோதியது.
இந்த விபத்தில் வேன் அப்பளம் போல நொறுங்கியது. டெம்போ வேன் ஓட்டுநர் உட்பட 4 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10 பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.