திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற வாகனச் சோதனையில், அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட 1 கிலோ தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றை கண்காணிக்கும் வகையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
திருச்சி விமான நிலையம் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் வியாழக்கிழமை பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டபோது, பாதுகாப்பு பெட்டக வசதியுடன்கூடிய சரக்கு வேன் ஒன்று திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கிச் சென்றது.
அந்த வேனை சோதனையிட்டபோது, புதுக்கோட்டையில் உள்ள நகைக் கடைக்கு வழங்குவதற்காக 20 பெட்டிகளில் 1047 கிராம் நகைகள் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.
மேலும், ஓசூரில் தொடங்கி தமிழகம் முழுவதும் உள்ள தனியார் நகைக் கடையின் பல்வேறு கிளைகளுக்கும் தங்க நகைகளை விநியோகம் செய்து வரும் இந்த வாகனம், திருச்சியில் உள்ள கடையில் நகைகளை கொடுத்துவிட்டு, புதுக்கோட்டைக்கு நகைகளுடன் சென்று கொண்டு இருந்ததும் தெரியவந்தது.
வாகனத்தில் நகைகளை கொண்டு செல்வதற்கான பிரத்யேக அனுமதி எதுவும் பெறப்படவில்லை.
எனவே, விதிகளை மீறி உரிய அனுமதி இல்லாமல் நகைகளை கொண்டு சென்றதால், அவற்றை பறக்கும் படையினர் கைப்பற்றி ஆட்சியரக வளாகத்தில் உள்ள கருவூலத்தில் வைத்துள்ளனர்.