வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்று அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்தார்.
உலக மகளிர் தினத்தையொட்டி, தேமுதிக மகளிரணி சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் வியாழக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் விஜயகாந்த் பேசியது: ""திமுகவுடன் கூட்டணி, பாஜகவுடன் கூட்டணி என்றெல்லாம் செய்திகள் வந்தன. கூட்டணி குறித்து குழப்பம் என்று சொல்லப்பட்டது. எனக்கு குழப்பம் எதுவும் இல்லை. கூட்டணி குறித்து தெளிவாக உள்ளேன். என் கட்சியை வழி நடத்த எனக்குத் தெரியும். அதற்கு யாருடைய அறிவுரையும் தேவையில்லை. நான் எந்தப் பக்கமும் செல்லவில்லை.
தனித்துப் போட்டியிடுவது ஏன்? வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக தனியாகத்தான் நிற்கும். காஞ்சிபுரம் மாநாட்டில் "கிங்'-காக இருக்க வேண்டுமா, "கிங் மேக்கராக' இருக்க வேண்டுமா என்று கேட்டேன். "கிங்'-காக இருக்க வேண்டும் என்று சொன்னீர்கள்.
அதன் பிறகு, வேட்பாளர் நேர்காணலிலும் கேட்டேன். அந்த முடிவுகளின்படி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக தனியாகத்தான் நிற்கிறது. என்னைக் கூட்டணிக்கு அழைத்த அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் நன்றி என்றார்.
குறிக்கோள் காரணமாக...கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியது:-
திமுக - அதிமுகவுக்கு மாற்றாகத் தொடங்கப்பட்ட இயக்கம்தான் தேமுதிக. ஆனால், 2011-இல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தோம். அப்படி ஏன் கூட்டணி அமைத்தீர்கள் என்று கேட்கலாம்.
ஆனால், அதிமுக ஆட்சி மக்களுக்கு விரோதமாக பால் விலையை உயர்த்தியபோது, அதை எதிர்த்து, அந்தக் கூட்டணியே வேண்டாம் என்று வெளியேறி வந்த இயக்கம்தான் தேமுதிக.
திமுக - அதிமுக, பாமக ஆகிய மூன்று கட்சிகளுமே ஊழல் கட்சிகள். அதிமுக சொத்துக் குவிப்பு வழக்கிலும், திமுக அலைக்கற்றை ஊழல் வழக்கிலும், பாமக மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியதிலும் ஊழல் புரிந்து நீதிமன்றத்துக்குச் சென்று வரக் கூடிய நிலை இருக்கிறது. இந்தக் கட்சிகளின் ஆட்சியை தமிழகத்தில் இருந்து விரட்டி அடிப்பதே தேமுதிகவின் குறிக்கோள். மக்கள் வறுமையிலேயே இருக்க வேண்டும் என்பதற்காகவே திமுக - அதிமுக ஆட்சியில் இலவசங்கள் கொடுக்கப்படுகின்றன. இலவசங்கள் எதுவும் கொடுக்காமல் தமிழர்கள் தன்மானத்துடன் வாழ்வதற்கான நல்லாட்சியை உருவாக்குவோம்.
பேரத்துக்கு அவசியமில்லை: கூட்டணிக்காக பேரம் பேசுவதாக பத்திரிகைகள் எழுதுகின்றன. பேரம் பேச வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. படத்தில் நடித்து, அந்த உழைப்புக்கான பணத்தைத் தயாரிப்பாளர்களிடம் இருந்து பெற்றதைத் தவிர, வேறு எங்கும் விஜயகாந்த் பணம் பெற்றது இல்லை. ஏழைகளுக்கு கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களுக்கு விஜயகாந்த் சொந்தக்காரர்.
50 ஆண்டு கால திமுக - அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக நல்லாட்சியை உருவாக்கும்.
நேர்மையான, ஊழல் இல்லாத ஆட்சியை வழங்குவோம். வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவோம். இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழகத்தைக் கொண்டு வருவோம் என்றார்.
வேட்பாளர் தேர்வுக் குழு: 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்த விஜயகாந்த், வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கு 7 பேர் கொண்ட குழுவையும் நியமித்து அறிவித்தார்.
தேமுதிக இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ், பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோவன், கொள்கைப்பரப்புச் செயலாளர் வி.சி.சந்திரகுமார், தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதி, பேராசிரியர் ரவீந்திரன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அழகாபுரம் மோகன்ராஜ், வெங்கடேசன் ஆகியோரைக் கொண்ட குழு வெள்ளிக்கிழமை (மார்ச் 11) முதல் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியைத் தொடங்குவர் என்று விஜயகாந்த் கூறினார்.
அனைத்துக் கட்சிக்கும் நன்றி: கூட்டணிக்கு அழைப்பு விடுத்த திமுக தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாஜகவின் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக விஜயகாந்தும், பிரேமலதாவும் கூறினர்.
விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்கள் கூட்டணிக்கு வரலாம்
தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்று விஜயகாந்த் அறிவித்தார். எனினும், தேமுதிக தலைமையை ஏற்க விரும்பும் கட்சிகள் கூட்டணிக்கு வரலாம் என்றும் அக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில் தேமுதிகவுடன் ஒத்த கருத்து உள்ள கட்சிகள் கூட்டணிக்கு வரலாம் என்று கூறினார். திமுக - அதிமுக இல்லாத ஆட்சியை தமிழகத்தில் ஏற்படுத்துவோம். முரசு, தமிழகத்தின் நாளைய அரசு. முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை ஏற்பவர்களும், தேமுதிகவுடன் ஒத்த கருத்து உள்ளவர்களும் கூட்டணிக்கு வரலாம். திமுக - அதிமுக ஆட்சியை அகற்ற விரும்புகிறவர்களும் கூட்டணிக்கு வரலாம். அப்படி வருகிறவர்கள் தேமுதிக சார்பில் அமைக்கப்பட்டுள்ள 7 பேர் கொண்ட குழுவினரை அணுகலாம் என்றார்.
விஜயகாந்த் பேசுவது புரியாதது ஏன்?
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசுவது புரியவில்லை என்று பிறர் கூறி வருவதற்கு பிரேமலதா விஜயகாந்த் விளக்கமளித்துள்ளார்.
சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற தேமுதிக மகளிரணி கூட்டத்தில் பிரேமலதா கூறியது:
விஜயகாந்த் பேசுவது புரியவில்லை என்கிறார்கள். விஜயகாந்துக்கு சைனஸ் இருக்கிறது. மூக்கடைப்பு, தொண்டை அடைப்பு இருக்கிறது. சிவாஜிக்குப் பிறகு பக்கம் பக்கமாக வசனம் பேசுபவர் விஜயகாந்த். தொண்டையில் அவருக்கு "டான்சில்' பிரச்னை இருக்கிறது என்றார் அவர்.