
அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் இன்னும் வெளியிடப்படாத நிலையில், ஆலங்குடி தொகுதியில் வாக்குச் சேகரிக்கும் பணியை முதலாவதாக தொடங்கியுள்ளார் பாமக வேட்பாளர்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள சேந்தன்குடியைச் சேர்ந்தவர் சுப. அருள்மணி. பாமகவின் மாநில துணைப் பொதுச் செயலர்களில் ஒருவரான இவர், கடந்த 2011 தேர்தலில் திமுக கூட்டணியில் ஆலங்குடி தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த நிலையில், கடந்த மாதம் கீரமங்கலத்தில் நடைபெற்ற இவரது குழந்தைகளின் காதணி விழாவுக்காக கட்சியின் சின்னத்தோடு, சுமார் 80 ஆயிரம் அழைப்பிதழ்கள் அச்சடித்து தொகுதி மக்களுக்கு வழங்கி நூதன முறையில் பிரசாரத்தைத் தொடங்கினார்.
இந்த விழாவில் தனது குடும்பத்தினருடன் பங்கேற்ற ராமதாஸ் பேசுகையில், பாமகவின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி, ஆலங்குடி தொகுதியின் வேட்பாளர் அருள்மணி. அவர் வெற்றி பெற்று முதல்வர் ஆவார். இவர் வெற்றிபெற்றால் அமைச்சராவார் என்றார்.
இந்த நிலையில், கீரமங்கலம் பகுதியில் இருந்து பொதுமக்களைச் சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியை சுப. அருள்மணி புதன்கிழமை தொடங்கியுள்ளார். அந்தப் பகுதியில் வீடுவீடாகச் சென்றும், பொது இடங்களில் மக்களை சந்தித்தும், தனக்கு இந்த முறை வாய்ப்பளிக்க வேண்டும் என கேட்டு காலில் விழுந்து வாக்குச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.