ரயில்வே ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் ஜூலை 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச் செயலாளர் என்.கண்ணையா தெரிவித்தார்.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது:
மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-ஆவது ஊதிய கமிஷனில் உள்ள முரண்பாடுகளை நீக்க வேண்டும். அடிப்படை ஊதியத்தை ரூ.26 ஆயிரமாக நிர்ணயிப்பது, புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ரயில்வே தனியார்மயமாக்கலை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள ரயில்வே தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன. அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளனம் (ஏஐஆர்எப்), இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளனம் (ஐஎன்டியூசி), தெற்கு ரயில்வேயில் எஸ்ஆர்எம்யூ, டிஆர்இயூ உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்கவுள்ளன.
நாடு முழுவதும் 13 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பங்கேற்கவுள்ள இந்த வேலை நிறுத்தப் போராட்டம் வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் இந்தப் போராட்டம் ஜூலை மாதம் 11-ஆம் தேதி காலை 6 மணிக்கு தொடங்கும் என்றார் கண்ணையா.