மக்களின் சகிப்புத்தன்மையால் ஊழல் செய்வோர் மீண்டும் ஆட்சிக்கு வருகின்றனர்: அன்புமணி ராமதாஸ்

மக்களின் சகிப்புத் தன்மையால்தான் ஊழல் செய்வோர் மீண்டும் ஆட்சிக்கு வருகின்றனர் என, தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
மக்களின் சகிப்புத்தன்மையால் ஊழல் செய்வோர் மீண்டும் ஆட்சிக்கு வருகின்றனர்: அன்புமணி ராமதாஸ்

மக்களின் சகிப்புத் தன்மையால்தான் ஊழல் செய்வோர் மீண்டும் ஆட்சிக்கு வருகின்றனர் என, தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
 சேலத்தில் "உங்கள் ஊர், உங்கள் அன்புமணி' நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில் சேலம், நாமக்கல் மாவட்ட பிரச்னைகள், அதற்கான தீர்வுகள் குறித்து அன்புமணி ராமதாஸ் பேசியது:
 தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகள் ஆட்சி செய்து வருகின்றன. எனவே, ஆட்சியில் மாற்றம் வேண்டும் என்று மக்கள் ஏக்கத்தில் உள்ளனர்.
 மாநிலத்தில் பூரண மதுவிலக்கைக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. ஆனால், மதுவிலக்கு கொண்டு வந்தால் கள்ளச் சாராயம் வந்துவிடும் என அமைச்சர் கூறுகிறார்.
 கடந்த சில ஆண்டுகளில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 பேர் மட்டுமே ஆகும். ஆனால், அரசு விற்கும் மதுவைக் குடித்து 2 லட்சம் பேர் இறந்துள்ளனர்.
 மக்களிடையே உள்ள சகிப்புத் தன்மையால்தான் ஊழல் செய்வோர் மீண்டும் ஆட்சிக்கு வருகின்றனர். ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனில், சகிப்புத் தன்மையை விட வேண்டும். ஊழல் செய்தவர்களைத் தண்டிக்க வேண்டும். இதற்கு லோக் ஆயுக்த சட்டம் மூலம் தீர்வு காணப்படும்.
 பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் காவல் துறையில் இருப்பது போல நிர்வாக வசதிக்காக 6 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்படுவர். நிர்வாகத்தில் அதிகாரப் பரவலை கொண்டு வருவோம். கடந்த 50 ஆண்டுகளாகத் திராவிடக் கட்சிகள் செய்யாததை, நான் 5 ஆண்டுகளில் செய்வேன். எனவே, பா.ம.க.வுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.
 நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேளாண் துறைக்கு மூன்று அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள். தமிழகத்தில் நிலுவையில் உள்ள 20 நீர்ப் பாசனத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். நீர்ப் பாசனத் திட்டங்களை நிறைவேற்றினால் எந்தப் பிரச்னையும் இருக்காது. மாநிலத்தில் சராசரியாக ஆண்டுக்கு 922 மில்லி மீட்டர் மழை பெய்கிறது.
 சேலத்தில் திருமணிமுத்தாறு சாக்கடையாக ஓடுகிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும். மேட்டூர் உபரி நீர்த் திட்டத்தின் மூலம் சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட விவசாயிகள் பயன்பெறுவர்.
 அதேபோல, தோனிமடுவுத் திட்டத்தையும் செயல்படுத்தினால் பல மாவட்டங்கள் பயன்பெறும். சிறப்பு வேளாண் பொருளாதார மண்டலம் மூலம் குளிர் சாதன வசதிகளுடன் சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும். மரவள்ளிக் கிழங்கு உற்பத்தி அதிகம் உள்ளதால், மதிப்புக் கூட்டுப் பொருள்களை உற்பத்தி செய்ய விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவார்கள்.
 நாமக்கல் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரித் தொடங்குவோம். அதேபோல, மருத்துவக் கல்லூரிகள் இல்லாத 15 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவோம்.
 ஏற்காட்டை சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவோம். நாமக்கல்லில் உள்ள கொல்லிமலையை சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கை எடுப்போம். மாநிலத்தில் உள்ள நதிநீர்ப் பங்கீடு, மீனவர் பிரச்னைகளுக்கு சரியான அணுகுமுறையைக் கையாண்டால், சுமுகத் தீர்வு காண முடியும் என்றார்.
 பின்னர் அவர், மரவள்ளிக் கிழங்கு உற்பத்தி விவசாயிகள், வணிகர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அரசியல் கட்சிகளில் பிளவு ஏற்படுத்தும் போக்கு கண்டிக்கத்தக்கது
முன்னதாக அன்புமணி செய்தியாளர்களிடம் கூறியது:
 தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவித்த தேதியில் இருந்து விஜயகாந்த் எங்கே உள்ளார் என்பது தெரியவில்லை. முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர், மக்களைச் சந்தித்து என்ன செய்யப் போகிறோம் என்று கூற வேண்டும்.
 தமிழகத்தில் அரசியல் கட்சிகளை உடைத்துப் பிளவு ஏற்படுத்தும் போக்கு கண்டனத்துக்குரியது. இச் செயல் தரம் தாழ்ந்த அரசியலை வெளிப்படுத்துகிறது. இதுபோன்ற செயல்களில் அரசியல் கட்சிகள் ஈடுபடக் கூடாது. பா.ம.க. எப்போதும் நாகரிகமான அரசியலையே விரும்புகிறது. அ.தி.மு.க.வில் வேட்பாளர் பட்டியல் இறுதிப் பட்டியல் அல்ல என்று ஏற்கெனவே கூறியிருந்தேன். அதுபோல வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இது மேலும் தொடரும். அதிமுக தேர்தல் பயத்தில் உள்ளது. தமிழகத்தில் தேர்தல் ஆணையம் தபால் நிலையம் போல செயல்படுகிறது என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com