Enable Javscript for better performance
கடலோரப் பகுதிகளில் வசிப்போருக்கு மாவட்ட ஆட்சியர்கள் முக்கிய வேண்டுகோள்- Dinamani

சுடச்சுட

    

    கடலோரப் பகுதிகளில் வசிப்போருக்கு மாவட்ட ஆட்சியர்கள் முக்கிய வேண்டுகோள்

    By dn  |   Published on : 15th April 2016 12:10 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    beach

    தூத்துக்குடி : தமிழகத்தில் கடலோரப் பகுதிகளில் வெப்ப அனல் காற்று வீசும் என, வானிலை மையம் அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்

    இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்ட வானிலை அறிக்கையில், அடுத்த 48 மணி நேரத்துக்கு கடலோரப் பகுதிகளில் வெப்ப அனல் காற்று வீசும் எனத் தெரிவித்துள்ளது.

    மேலும் வெப்பநிலையானது 35 செல்சியஸ் முதல் 41 செல்சியஸ்வரை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    எனவே பொதுமக்கள் வெள்ளி, சனிக்கிழமையில் (ஏப்ரல் 15, 16) ஆகிய 2 நாள்களிலும் வெப்பம் தாக்காத வகையில் ஆடை அணியவும்.

    வெப்பத்திலிருந்து கண்களைப் பாதுகாக்க உரிய உபகரணங்களை அணியவும்.

    உடலில் நீர்ச்சத்து குறையாத வகையில் உரிய நீர்பானங்களை கையில் கொண்டு செல்லவும்.

    கூடுமானவரை பகல் 12 முதல் பிற்பகல் 3 மணிவரை வெயிலில் நின்று செய்யும் பணிகளைத் தவிர்க்க வேண்டும்.

    வயது முதிர்ந்தவர்கள், சிறுவர், சிறுமிகள் முடிந்தவரை இந்த 2 நாள்களிலும் பகல் 12 முதல் பிற்பகல் 3 மணிவரை வீட்டைவிட்டு வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

    தங்களிடம் உள்ள கால்நடைகளை நிழல்தரும் இடங்களில் நிறுத்தி அதிக நீர் வழங்கவும்.

    யாரேனும் சூரிய வெப்பத்தால் தாக்கப்பட்டு கீழே விழுந்தால் அவரை குளிர்ச்சியான பகுதிக்கு கொண்டு சென்று ஈரத்துணியால் அவரைத் துடைத்து உடலின் வெப்பநிலையைக் குறைக்க வேண்டும்.

    மேலும், எலுமிச்சை சர்பத் போன்ற பானங்களை வழங்கி, நீர்ச்சத்து வெளியேறாமல் தடுத்து, அருகேயுள்ள சுகாதார மையங்களுக்கு கொண்டுசென்று முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும்.

    அவசர கால உதவிக்கு கட்டணமில்லா தொலைபேசி அழைப்பான 1077 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai