Enable Javscript for better performance
சிபிஐயினர் மீது தாக்குதல்: சுங்கத் துறை கண்காணிப்பாளர் சென்னையில் சரண்- Dinamani

சுடச்சுட

    

    சிபிஐயினர் மீது தாக்குதல்: சுங்கத் துறை கண்காணிப்பாளர் சென்னையில் சரண்

    By  மதுரை,  |   Published on : 15th April 2016 12:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரையில் சிபிஐ அதிகாரிகள் தாக்கப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த சுங்கத் துறை கண்காணிப்பாளர் அசோக்ராஜ் சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
     மதுரை சுங்கத் துறை கண்காணிப்பாளர் அசோக்ராஜ், ஹவில்தார் கிருஷ்ணன் ஆகிய இருவரும் லஞ்சம் வாங்கியபோது, சிபிஐ அதிகாரிகளால் கடந்த 8-ஆம் தேதி கையும் களவுமாக பிடிபட்டனர். சுங்கத் துறை அலுவலகத்தில் வைத்து இருவரிடமும் விசாரணை நடத்தியபோது, அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்த 10 பேர் கொண்ட கும்பல் சிபிஐ அதிகாரிகளைத் தாக்கிவிட்டு இருவரையும் மீட்டுச்சென்றது.
     இதுதொடர்பாக தல்லாகுளம் போலீஸார் வழக்குப் பதிந்து தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். இதில் தனியார் பள்ளித் தாளாளரும், சுங்கத் துறை அதிகாரியுமான சாமி, தனியார் பள்ளி ஊழியர்கள் முத்துப்பாண்டி, சரவணன் ஆகிய 3 பேரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
     இந்த நிலையில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய சுங்கத் துறை கண்காணிப்பாளர் அசோக்ராஜ், சென்னை பெருநகர நீதித் துறை நடுவர் மன்றம் 5-இல் புதன்கிழமை மாலை சரணடைந்தார். அவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
     இதுகுறித்த தகவல் அறிந்த மதுரை தனிப்படை போலீஸார் சென்னை சென்றுள்ளனர். அசோக்ராஜை காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரி, சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய இருப்பதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai