Enable Javscript for better performance
தேமுதிக தலைமையில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி மலரும்: திருமாவளவன்- Dinamani

சுடச்சுட

    

    தேமுதிக தலைமையில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி மலரும்: திருமாவளவன்

    By  சென்னை,  |   Published on : 15th April 2016 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    6

    தேமுதிக தலைமையில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி மலரும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
     அம்பேத்கரின் 125-ஆவது பிறந்த நாள் விழா மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெளிச்சம் தொலைக்காட்சி தொடக்க நிகழ்வு சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
     வெளிச்சம் தொலைக்காட்சியை தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொடங்கி வைத்தார். விடுதலை சிறுத்தைகளின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடங்கி வைத்தார். விழாவில் திருமாவளவன் பேசியது:
     இந்திய சமூகம் அம்பேத்கரை பொதுத் தலைவராக ஏற்றுக்கொள்ள தயங்குகிறது. ஆனால், சர்வதேச சமூகம் அவரை உலகத் தலைவராக பார்க்கிறது. ஐ.நா.பேரவை
     அவரது பிறந்த நாளை கொண்டாடி மரியாதை செலுத்தியுள்ளது. வெளிச்சம் தொலைக்காட்சியை தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொடங்கி வைத்திருப்பது எங்களுக்கு பூரிப்பாக இருக்கிறது.
     விஜய் என்றால் வெற்றி. விஜயகாந்த் என்றால் வெற்றியை ஈர்ப்பவர் என்று பொருள். அதனால் விஜயகாந்த் நிச்சயம் வருகிற பேரவை தேர்தலில் வெற்றியை அடைவார்.
     தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா கூட்டணியை வடிவமைப்பதில் வைகோ பெரும் பங்களிப்பு செய்துள்ளார். விஜயகாந்த் கருப்பாக இருந்தாலும் அவரது உள்ளம் வெள்ளை.
     இந்த தேர்தலில் வெற்றி பெறுகிறோமோ இல்லையோ, ஆனால் விஜயகாந்தை இந்த கூட்டணிக்கு அழைத்து வந்தது எங்களின் மிகப் பெரிய வெற்றி. பலவித விமர்சனங்களை உடைத்து கொள்கை, குறிக்கோள்களுக்கு மட்டுமே விஜயகாந்த் மதிப்பளிப்பது வருகிறார். விஜயகாந்தின் முடிவு வரலாற்றுச் சிறப்பு மிக்கது.
     ஊழல் ஒழிப்பு, மது ஒழிப்பு, கூட்டணி ஆட்சி இந்த மூன்றும்தான் தேமுதிகவோடு நாங்கள் கைகோர்க்கக் காரணம்.
     அதிகார மையத்துக்கும் எளிய மக்களுக்கும் தொடர்பு இல்லையென்று சொல்லி வருகிறேன். அதிகாரப் பகிர்வுதான் உண்மையான ஜனநாயகம் என்ற முழக்கத்தை 1998-ஆம் ஆண்டு முதல் முன்னெடுத்து வருகிறோம். அது எங்களின் வெற்றி மூலம் நனவாகப் போகிறது.
     தேமுதிக தலைமையில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி மலரும். அதை நிச்சயம் நாங்கள் இணைந்து வென்றெடுப்போம் என்றார் திருமாவளவன்.
     எங்கள் வெற்றி வரலாறாகும் - வைகோ: தமிழக அரசியல் வரலாற்றில் 1967-ஆம் ஆண்டு அண்ணாவால் பெரிய மாற்றம் நிகழ்ந்தது. அதன் பிறகு இப்போது மாற்றம் நிகழ இருக்கிறது. இந்த மாற்றம் வரலாறாகும். தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுமையும் இந்த வெற்றி பேசப்படும். உலக வரலாறு இந்த வெற்றியை எதிர்காலத்தில் அலசி ஆராயும்.
     அண்ணா மறைவுக்குப் பின் தமிழகத்தை சூழ்ந்த ஊழல், மது என்ற இரண்டு இருள்களும் 50 ஆண்டுகளுக்குப் பின் விலகி வெளிச்சம் பிறக்கவுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொடுத்த வார்த்தைகளில் உறுதியாக இருக்கிறார். அந்த உறுதிதான் எங்களின் முதல் வெற்றி.
     இப்போது நடந்து வருவது ஒரு ஜீவ மரண போராட்டம். எங்களிடம் ஒருங்கிணைப்பு இருப்பதால் வெற்றி சாத்தியமாகும். எங்களின் வெற்றியை திமுக தலைவர் கருணாநிதி நாகரீகத்தோடு வாழ்த்த வேண்டும் என்றார் வைகோ.
     விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த். தமாகா தலைவர் ஜி.கே.வாசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோரும் பேசினர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai