Enable Javscript for better performance
பணபலம்: சோதனைகள் நடத்த வருமான வரித் துறைக்கு மட்டுமே அனுமதி; தேர்தல் ஆணையம் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பணபலம்: சோதனைகள் நடத்த வருமான வரித் துறைக்கு மட்டுமே அனுமதி; தேர்தல் ஆணையம் அறிவிப்பு

    By  சென்னை,  |   Published on : 15th April 2016 08:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    rupees-3

    தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் பண பலத்தைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. பணம் இருப்பதாக புகார்கள் பெறப்பட்டால், சம்பந்தப்பட்ட இடத்தில் வருமான வரித் துறையினர் மட்டுமே சோதனை நடத்துவர் என்று தெரிவித்துள்ளது.

     தமிழகத்தில் பண பலத்தைத் தடுக்க பல அதிரடி நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் முன்வைத்துள்ளது. இந்த நடவடிக்கைகள் குறித்த விவரங்களை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளது. அதன் விவரம்:

     பணம் எடுத்துச் செல்லப்படுகிறது போன்ற புகார்கள் வரப்பெற்றால் அந்தப் புகாரை பெறக் கூடிய மாவட்ட தேர்தல் நிர்வாகமானது, உடனடியாக செலவினப் பார்வையாளருக்கு அதுகுறித்துத் தெரிவிக்க வேண்டும். செலவினப் பார்வையாளர் அல்லது தேர்தலுக்கான தொடர்பு அலுவலர், வருமான வரித் துறை குழுவுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
     ஓர் இடத்தில் பணம் விநியோகம் நடைபெறுகிறது அல்லது பணம் பதுக்கப்படுகிறது எனத் தெரிந்தால் அந்த இடத்தில் இருந்து சில குறிப்பிட்ட தூரத்துக்குள் பறக்கும் படையினர் முகாமிட்டு அதனை கண்காணிக்க வேண்டும்.

     வருமான வரித்துறை குழுவினர் வருவதற்கு முன்பாக, பறக்கும் படையினரோ அல்லது செலவினப் பார்வையாளரோ சம்பந்தப்பட்ட இடத்துக்குள் நுழையக் கூடாது. வருமான வரி சட்டத்தின் கீழ்தான், சம்பந்தப்பட்ட ஓர் இடத்தை சோதனை செய்ய வேண்டும்.  வருமான வரித் துறையினரால் சோதனை நடத்தப்படும் போது அதற்குத் தேவையான அனைத்து வகையான உதவிகளையும் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கண்காணிப்பாளரும் அளிக்க வேண்டும்.

     செலவினப் பார்வையாளரோ அல்லது பறக்கும் படையினரோ தங்களது விருப்பத்துக்கு ஏற்றார் போல ஒரு இடத்தில் சோதனைகளை நடத்த அனுமதி கிடையாது. வருமான வரித் துறையின் குழுவுக்கு அந்த அதிகாரம் அளிக்கப்படுகிறது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு அனுப்பிய அறிக்கையில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai