Enable Javscript for better performance
வேட்பாளராக அறிவிக்கப்படாதவர்கள் வருந்த வேண்டாம்: கருணாநிதி- Dinamani

சுடச்சுட

    

    வேட்பாளராக அறிவிக்கப்படாதவர்கள் வருந்த வேண்டாம்: கருணாநிதி

    By  சென்னை,  |   Published on : 15th April 2016 08:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Karunanidhi

    வேட்பாளர்களாக அறிவிக்கப்படாதவர்கள் வருந்த வேண்டாம். அனைத்துத் தொகுதிகளிலும் திமுகவே போட்டியிடுகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
     இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
     திமுகவின் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள், என்னைச் சந்தித்துச் சால்வை அணிவித்தனர். அந்த நேரத்தில் அதே தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்கள் வருந்துவார்களே என்ற வேதனைதான் என் மனதைக் குடைந்தது.
     எனக்கே நன்றாகத் தெரிந்தவர்கள், பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறையில் வாடியவர்கள் என்று சிலரின் வாரிசுகளுக்கு வாய்ப்பளிக்க விரும்பினேன்.
     வாய்ப்பளிக்க முடியாமல் போனது ஏன்? எனினும், இந்தத் தேர்தலில் விருப்பமானவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதைவிட, வெற்றிவாய்ப்பு அதிகமுள்ளவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதுதான் சிறப்பு என்று கூறப்பட்டதால், சிலருக்கு வாய்ப்பு அளிக்க முடியாமல் போய்விட்டது. அதனால் அவர்கள் எல்லாம் வருந்துவார்களே என்ற வேதனைதான் எனக்கு மிகுதியாக உள்ளது. சில தொகுதிகளில் நாங்கள் வெற்றி வேட்பாளர் என்று தேர்ந்தெடுத்து அறிவிப்பதற்காக காத்திருந்த நிலையில், அந்தத் தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு அளிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது.
     அறிவிக்கப்படாதவர்கள் யாரும் வருத்தப்பட வேண்டாம். அந்தத் தொகுதிகள் அனைத்திலும் திமுகதான் போட்டியிடுகிறது என்ற உறுதியான எண்ணத்துடன் திமுகவினர் உழைத்திட வேண்டும்.
     போட்டியிட வாய்ப்பு கிடைத்தோரும், நமக்கு வாய்ப்பு கிடைத்துவிட்டது, நமக்கு எதிராகப் போட்டியிட மனு செய்தவர்களைக் கவனித்துக் கொள்ளலாம் என்ற எதிர்மறை போக்குடன் நடந்துகொள்ளக் கூடாது. அனைவரையும் அரவணைத்து வெற்றிக்காக முழு மூச்சுடன் செயல்பட வேண்டும்.
     அனைத்திலும் "நான்தான்': அனைத்துத் தொகுதிகளிலும் உங்களுக்காக மேலும் நான் தொடர்ந்து உழைத்திட, உங்களுக்குப் பதிலாக நான்தான் போட்டியிடுகிறேன்.
     எனவே, திமுகவினர் சிறு வேற்றுமை இருந்தாலும், அதனை மறந்து குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பதை நினைத்து செயல்பட வேண்டும்.
     அடுத்த முறை மற்றொருவர் அந்தப் பொறுப்புக்கு வரட்டும் என்ற விட்டுக் கொடுக்கும் விசால நோக்குடன் பணியாற்ற வேண்டும் என்பதை எச்சரிக்கையாகத் தெரிவிக்கிறேன்.
     மாறாக, மோதியே தீருவோம் என்கிற ரீதியில் நிகழ்வுகள் நடக்குமானால், அது மோதுவோரின் சொந்த வீடான திமுகவுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai