மது, ஊழல் ஒழிப்புதான் எங்களின் பிரதான லட்சியம்

மது ஒழிப்பு, ஊழல் ஒழிப்புதான் எங்கள் கூட்டணியின் பிரதான லட்சியம் என மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ கூறினார்.
மது, ஊழல் ஒழிப்புதான் எங்களின் பிரதான லட்சியம்

மது ஒழிப்பு, ஊழல் ஒழிப்புதான் எங்கள் கூட்டணியின் பிரதான லட்சியம் என மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ கூறினார்.
 மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளரும், மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ சென்னை அண்ணா நகரில் தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார்.
 அண்ணாநகர் எம்.ஜி.ஆர். காலனியில் அமைக்கப்பட்டிருந்து பொதுக்கூட்ட மேடையில்
 அவர் பேசியதாவது: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எங்கே இருக்கிறார் என்றுதான் தெரியவில்லை. அரசியல் கட்சியினரிடம் பணத்தைப் பறிமுதல் செய்வதற்குப் பதிலாக, விவசாயிகளிடமும், வணிகர்களிடமும் பணத்தை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்து வருகிறது.
 பண நாயகத்துக்கும் ஜனநாயகத்துக்கும்...: நூதன முறையில் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. இது பணநாயகத்துக்கும், ஜனநாயகத்துக்கும் இடையே நடைபெறுகின்ற போராட்டம். எனவே, நமது கூட்டணியில் உள்ள 6 கட்சிகளின் கண்காணிப்புப் படை இதைத் தடுக்க இணைந்து பாடுபடவேண்டும்.
 லோக் ஆயுக்த கொண்டு வருவோம்: லோக் ஆயுக்த சட்டம் கொண்டு வருவோம் என காலையில் தொலைக்காட்சியில் ஒருவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டு, வேனில் தேர்தல் பிரசாரம் செய்து வரும் திமுக பொருளாளர் ஸ்டாலினும் அதையே சொல்கிறார்.
 லோக் ஆயுக்த சட்டம்னா என்ன என்று கூட ஸ்டாலினுக்குத் தெரியாது. இத்தனை ஆண்டுகள் ஊழலில் ஈடுபட்டு கொள்ளையடித்தவர்கள் சொல்வதை மக்கள் நம்ப மாட்டார்கள்.
 தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா கூட்டணி ஆட்சி அமைந்ததும் லோக் ஆயுக்த சட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும். ஊழல் ஒழிக்கப்படும். அதிமுக அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் கொள்ளையடித்த சொத்துக்களைப் பறிமுதல் செய்து ஏலத்தின் மூலம் மக்கள் சொத்தாக்குவோம். திமுக அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள் அபகரித்த நிலங்களை மீட்போம்.
 மக்களை ஏமாற்றவே மது
 விலக்கு அறிவிப்பு: தமிழகத்தில் மதுவை படிப்படியாக ஒழிப்போம் என அதிமுகவும், மதுவிலக்கை அமல்படுத்துவோம் என திமுகவும் கூறிவருகிறது. சசிபெருமாள் இறந்தபோதும், மதிமுக சார்பில் போராட்டம் நடத்தியபோதும் அறிவிக்காத இவர்கள், இப்போது தேர்தலுக்காக இவ்வாறு கூறுவது மக்களை ஏமாற்றத்தான்.
 எல்லாப் பிரச்னைகளிலும் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா கூட்டணி தெளிவாக இருக்கிறது. மது ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு எங்களின் பிரதான லட்சியம். கூட்டணி ஆட்சி அமைப்போம்
 வாக்குறுதிகள்: எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க பிளஸ்-2, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப் படிப்பு, எம்சிஏ, பி.இ. ஒவ்வொரு பிரிவுவாரியாக வேலை கிடைக்காமல் இருப்பவர்களுக்கு நிவாரண உதவித் தொகை அளிக்கப்படும். கல்விக் கடனை அரசே செலுத்தும். சிறு வணிகத்தை மேம்படுத்தும் வகையில் உலக வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து இந்தியா வெளியேறச் செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்.
 மீனவர்களின் வாழ்வாதாரம் காக்கப்படும். மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து, மீனவர்களை இலங்கை ராணுவம் தாக்குவது முற்றிலுமாகத் தடுக்கப்படும்.
 அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வருவோம். அதற்கு என்ன வழி உள்ளது என்பது எங்களுக்குத் தெரியும். விவசாயச் சங்கங்களின் அனைத்துக் கோரிக்கைகளும் ஏற்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும். விவசாயக் கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும். அதாவது கூட்டுறவுக் கடன், தேசிய வங்கிக் கடன், தனியார் நிதி நிறுவனக் கடன், கந்துவட்டிக் கடன் என அனைத்தும் ரத்து செய்யப்படும். ஜப்தி என்ற பேச்சுக்கே இடமிருக்காது. ஆந்திரமும், தெலங்கானாவும் செய்ததைக் காட்டிலும் திருத்தமாகச் செய்வோம்.
 தமிழக வாழ்வாதரங்கள் காக்கப்படும். மீத்தேன், பாறை எரிவாயு எடுக்கும் திட்டத்தை நுழைய விடமாட்டோம். முல்லைப் பெரியாறு உரிமை காக்கப்படும் என்றார் வைகோ.
 கூட்டணி ஆட்சிக்கு வாக்களிக்க வேண்டுகோள்: சென்னை அண்ணாநகரில் பிரசாரத்தை முடித்துவிட்டு வில்லிவாக்கம் சென்ற வைகோ, வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகே வேனில் நின்றபடி, அந்தத் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் தா.பாண்டியன், எழும்பூர் (தனி) தொகுதி தேமுதிக வேட்பாளர் பிரபு, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தேமுதிக வேட்பாளர் அப்துல்லா ஷேக் ஆகியோரை ஆதரித்துப் பிரசாரம் செய்தார்.
 அப்போது பேசிய வைகோ, அண்ணா மறைவுக்குப் பின்னர் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்த திமுக, அதிமுக கட்சிகள் தமிழகத்தை ஊழல் என்ற படுகுழியில் தள்ளிவிட்டன. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மக்களின் மகத்தான தீர்ப்பால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையப் போகிறது. புதியதோர் மாற்றம் நிகழ எங்கள் கூட்டணி கட்சிகளின் ஆட்சி அமையும் வகையில் மக்கள் வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
 ஊழலில் முதலிடம் தமிழகம்: பின்னர் கொளத்தூர் பேப்பர் மில்ஸ் சாலை சந்திப்பில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் மதிவாணனை ஆதரித்து பிரசாரம் செய்த வைகோ பேசியது:- நரேந்திர மோடி அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளைத் தடுக்காவிட்டால், இங்குள்ள சிறு கடை வியாபாரிகள் எவரும் இனி கடை வைக்க முடியாது. வால்மார்ட் உள்ளிட்ட வெளிநாட்டு கம்பெனிகளும் இங்கு வந்து பெரிய மால்களைத் தொடங்குவதால் லட்சக்கணக்கான சிறு கடை வியாபாரிகள் நடுத் தெருவுக்கு வரும் நிலை உருவாகி வருகிறது.
 மக்களின் தீர்ப்பு தீர்மானிக்கும்: இந்த நிலை மாற உலக வர்த்த உடன்பாட்டிலிருந்து இந்தியா விடுபட வேண்டும். ஆன்-லைன் வர்த்தகம் தடுக்கப்படவேண்டும். தமிழகத்தை எடுத்துக்கொண்டால் லஞ்சம் இன்றி எந்த வேலையும் நடைபெறாத நிலைதான் உள்ளது. ஒரு காலத்தில் விடுதலைப் போராட்ட வீரர்களாலும், பேரறிஞர் அண்ணாவாலும், பெரியாராலும், காமராஜராலும், ராஜாஜியாலும் புகழ் பெற்ற இந்தத் தமிழகம், இன்று இந்தியாவிலேயே ஊழலில் முதலிடம் பெற்றுள்ளது. எனவே, மக்களின் தீர்ப்புதான் தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகிறது என்றார் வைகோ.
 மது அருந்திவிட்டு வந்தால்...
 சென்னை அண்ணாநகரில் சனிக்கிழமை தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய வைகோ, மேடையில் பேசும்போது தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு மது அருந்திவிட்டு வருபவர்களை கட்சித் தொண்டர்கள் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்றார்.
 மது ஒழிப்பை பிரதான திட்டமாக முன்னிறுத்தி தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி பிரசாரம் செய்து வருகிறது. அப்படி இருக்கும்போது நமது பொதுக் கூட்டத்திலேயே சிலர் மது அருந்தி வருவது ஏற்புடையதாக இருக்காது. மேலும் அதுபோன்ற நபர்களை பிரசாரத்துக்கு உடன் அழைத்துச் செல்லக் கூடாது என தொண்டர்களை வைகோ கேட்டுக்கொண்டார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com