
முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை திங்கள்கிழமை (ஏப். 25) தாக்கல் செய்கின்றனர்.
சென்னை மாவட்டத்துக்குட்பட்ட ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) தொகுதியில் முதல்வர் ஜெயலலிதாவும், திருவாரூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் கருணாநிதியும் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அந்தந்த தொகுதிகளுக்குட்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் அலுவலகங்களில் செய்யப்பட்டுள்ளன.
தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் வேட்புமனு தாக்கல் கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. மனுதாக்கல் தொடங்கிய முதல் நாளில் 83 பேர் மட்டுமே மனுக்களை அளித்தனர். அதில், மூவர் மட்டுமே திமுகவினர். மற்ற அனைவரும் சுயேச்சையாக மனு தாக்கல் செய்தனர்.
முதல்வர்-அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா: இரண்டு நாள் (சனி-ஞாயிறு) இடைவெளிக்குப் பிறகு, மனுதாக்கல் திங்கள்கிழமை மீண்டும் தொடங்குகிறது. முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான
ஜெயலலிதா ஆர்.கே.நகரில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை திங்கள்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் தாக்கல் செய்கிறார்.
இதற்காக தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகம் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி நான்காவது மண்டல அலுவலகத்துக்கு ஜெயலலிதா வருகிறார். மனு தாக்கலைத் தொடர்ந்து பிற்பகலில் அவர் புதுச்சேரி சென்று அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.
திமுக தலைவர் கருணாநிதி: திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் கருணாநிதி தனது வேட்புமனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்கிறார். இதற்கான அறிவிப்பை அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது தேர்தல் பிரசார பயணத் திட்டத்தின்போதே அறிவித்திருந்தார். அதன்படி,
திங்கள்கிழமையன்று (ஏப். 25) மனுதாக்கல் செய்கிறார்.
வைகோ, தொல்.திருமாவளவன், அன்புமணி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், தான் போட்டியிடும் தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் மனு தாக்கல் செய்கிறார். ஆர்.கே.நகரில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர் சிம்லா முத்துசோழன் தனது வேட்புமனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்யவுள்ளார்.
மு.க.ஸ்டாலின்-பிற வேட்பாளர்கள்: சென்னை கொளத்தூரில் போட்டியிடும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது வேட்பு மனுவை வரும் 27-இல் தாக்கல் செய்கிறார். ஜெயலலிதாவைத் தவிர்த்து அதிமுகவைச் சேர்ந்த பிற வேட்பாளர்கள் அனைவரும் வரும் 28- இல் மனு தாக்கல் செய்யவுள்ளதாகத் தெரிகிறது.