
தமிழகத்தில் நிலவும் அனைத்து பிரச்னைகளுக்கும் அதிமுகவும், திமுகவும் தான் காரணம் என்றார் தேமுதிக மகளிரணி தலைவி பிரேமலதா விஜயகாந்த்.
அரியலூர் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ராமஜெயவேலை ஆதாரித்து, அரியலூர், கீழப்பழுவூர் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்து அவர் பேசியது:
தமிழகத்தில் இன்று நிலவும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தமிழகத்தை கடந்த 50 ஆண்டுகளாக ஆண்ட அதிமுகவும், திமுகவும்தான் காரணம். அரியலூரில் உயர் சிகிச்சை அளிக்க நல்ல மருத்துவமனைகள் இல்லை, அடிப்படை வசதிகள் இல்லை.
தமிழகத்தை கருணாநிதி 5 முறையும், ஜெயலலிதா 3 முறையும் ஆண்டிருந்தாலும் எந்த முன்னேற்றமும் இல்லை.
தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி ஆட்சி அமைந்தால், அரியலூர் மாவட்டத்தை தமிழகத்தின் முதல் நிலை மாவட்டமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் புதை சாக்கடை திட்டப் பணிகள் விரைந்து முடிக்கப்படும். அரியலூரிலுள்ள அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படும். ஒருங்கிணைந்த நீதிமன்றம், வாடகை கட்டத்தில் இயங்கும் அரசு அலுவலகங்கள் அனைத்தும் சொந்த கட்டடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும். அரியலூர் மாவட்டத்தில் முந்திரி தொழிற்சாலை அமைக்கப்படும்.
எனவே வாக்காளர்கள் ஒருமுறை எங்களுக்கு வாய்ப்பளியுங்கள். நாங்கள் நிச்சயமாக மாற்றத்தை கொண்டு வருவோம். மாற்றம் வந்தால்தான் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். தமிழகத்திலிருந்து இரு திராவிடக் கட்சிகளையும் அப்புறப்படுத்தும் நேரம் வந்துவிட்டது. எனவே, எங்களுக்கு 5 ஆண்டுகள் மட்டும் வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள். நிச்சயம் தமிழகத்தை மேம்படுத்துவோம் என்றார் பிரேமலதா.