Enable Javscript for better performance
நிறைவு பெற்றது வடகிழக்குப் பருவமழை: 5 மாவட்டங்களில் 100 சதவீதம் கூடுதல் மழை; காஞ்சிபுரத்துக்கு முதல் இடம்- Dinamani

சுடச்சுட

    

    நிறைவு பெற்றது வடகிழக்குப் பருவமழை: 5 மாவட்டங்களில் 100 சதவீதம் கூடுதல் மழை; காஞ்சிபுரத்துக்கு முதல் இடம்

    By  சென்னை,  |   Published on : 01st January 2016 02:01 AM  |   அ+அ அ-   |    |  

    நிகழாண்டு வட கிழக்குப் பருவமழை காலத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருநெல்வேலி, வேலூர் உள்பட தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இயல்பை விட 100 சதவீதத்துக்கும் கூடுதலாக மழை பதிவாகியுள்ளது. இதில், காஞ்சிபுரம் மாவட்டம் இயல்பை விட, 183 சதவீதம் கூடுதலாக மழை பெற்று முதலிடத்தில் உள்ளது.
     நிகழாண்டுக்கான வட கிழக்குப் பருவமழை காலம், அக்டோபர் 28-ஆம் தேதி தொடங்கியது. சுமார் ஒரு வார தாமதத்துக்குப் பின்னர், பருவ மழை தீவிரம் அடைந்தது.
     நவம்பர் மாதம், டிசம்பர் முதல் வார காலத்தில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்தது. குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரத்தில் ஒரே நாளில் 490 மி.மீட்டர் அளவுக்கு பலத்த மழை கொட்டியது. அதேபோல் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் 480 மி.மீ, காஞ்சிபுரத்தில் 340 மி.மீட்டர் அளவுக்கு மழை பதிவானது.
     வடகிழக்கு பருவமழைக் காலமான அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருநெல்வேலி, வேலூர் உள்பட 5 மாவட்டங்களில், இயல்பைக் காட்டிலும் அதிக மழை பெய்துள்ளது.
     காஞ்சிபுரத்தில் 1,815 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது, இயல்பை விட 183 சதவீதம் கூடுதலாகும். இங்கு வடகிழக்கு பருவமழை காலத்தில் சராசரி மழை 640 மி.மீட்டர் ஆகும். திருவள்ளூரில் 1,467 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது, இயல்பை விட 149 சதவீதம் கூடுதலாகும். சராசரி மழை 590 மி.மீட்டர் ஆகும்.
     திருநெல்வேலியில் 1,051 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது, இயல்பை விட 125 சதவீதம் கூடுதலாகும். இங்கு சராசரி மழையளவு 470 மி.மீட்டர் ஆகும். வேலூரில் 747.7 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது, இயல்பை விட 114 சதவீதம் கூடுதலாகும். சராசரி மழை 349 மி.மீட்டர் ஆகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
     இதுகுறித்து, சென்னையில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அதன் இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது: தமிழகத்தில் 3 மாதங்களில் (அக்.1 முதல் டிச.6) 673 மி.மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. இது, இயல்பு மழை அளவை விட, 53 சதவீதம் கூடுதலாகும்.
     பொதுவாக புயலைக் காட்டிலும், வலு குறைந்த நிகழ்வுகள், குறிப்பாக காற்றழுத்தத் தாழ்வு நிலை நமது பகுதியை நோக்கி அடிக்கடி வரும்போது, நிறைய மழைப் பொழிவானது கிடைக்கும் வாய்ப்புள்ளது.
     கடந்த 2005-ஆம் ஆண்டில் இயல்பைக் காட்டிலும், 79 சதவீதம் கூடுதல் மழை கிடைத்தது. இதற்கு, அந்த ஆண்டில் வங்கக் கடல் பகுதியில் அதிக அளவில் தாழ்வு நிலைகள் தோன்றியதே காரணமாகும். அதே போன்ற ஒரு நிகழ்வு, நிகழாண்டு வட கிழக்குப் பருவ மழை காலத்தில் ஒன்றன்பின் ஒன்றாக உருவாயின.
     இந்த நிகழ்வுகளே இயல்பைக் காட்டிலும், கூடுதலாக மழை பொழிய முக்கியக் காரணங்களில் ஒன்றாகும். இதேபோன்று, கூடுதல் மழைப்பொழிவுக்கு பல்வேறு காரணங்களை குறிப்பிடலாம். அதாவது, அந்தமான் கடல் பகுதிகளில் அதிக வெப்பம் இல்லாமல் இருந்தது. இதுவும், வடகிழக்குப் பருவ மழை காலத்தில் அதிக மழைப் பொழிவுக்கு முக்கிய காரணமாகும்.
     அந்தப் பகுதிகளில் வெப்பம் அதிகம் இருந்தால், உருவான காற்றழுத்த நிகழ்வுகள் வலுப்பெற்று புயலாக மாறி, வேறு பகுதிக்கு சென்றிருக்கும். வெப்பம் குறைவாக இருந்ததால், காற்றழுத்த நிகழ்வுகள் அனைத்தும் நம் பகுதியை நோக்கி வருவதற்கு உந்துதலாக அமைந்தது.
     மேலும் வட கிழக்குப் பருவமழையின்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்தது.
     அதாவது, 20 முதல் 30 கடல் மைல் வேகத்தில் காற்று வீசியதும், நல்ல மழைப்பொழிவுக்கு காரணம். வங்கக் கடல் பகுதியில், 2013-ஆம் ஆண்டில் அதிகளவில் புயல்கள் உருவாகின. ஆனாலும், அவை தமிழகம் நோக்கி வரவில்லை. ஆகையால், அந்தாண்டு இயல்பை விட 33 சதவீதம் குறைவான மழையே கிடைத்தது. நிகழாண்டு, வடகிழக்குப் பருவமழைக் காலம் நிறைவு பெற்றுள்ளது. இருப்பினும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை மழை தொடர வாய்ப்புள்ளது. ஜனவரியில் பெய்யும் மழையை வடகிழக்குப் பருவமழையாக கருத முடியாது. அவற்றை குளிர்கால மழையாகவே எடுத்துக் கொள்வோம் என்றார் எஸ்.ஆர்.ரமணன்.
    30 ஆண்டுகளுக்கு பின்னர் மீனம்பாக்கத்தில்...
    கடந்த 1985-ஆம் ஆண்டு, நவம்பர் மாதத்தில் சென்னை மீனம்பாக்கத்தில் 1,070 மி.மீட்டர் மழை பதிவானது. சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின்னர், நிகழாண்டு நவம்பர் மாதத்தில் மட்டும் 1,140 மி.மீட்டர் மழை பதிவாகியது. அதே போல், மாநில அளவிலும் நவம்பர் மாதத்தில் மட்டும் இயல்பை விட, 125 சதவீதம் கூடுதலாக மழை கிடைத்துள்ளது என வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.
    இயல்பை விட கூடுதல் மழை பெற்ற மாவட்டங்கள் விவரம்( மி.மீ)
    மாவட்டம்           அளவு        சதவீதம்
    காஞ்சிபுரம்          1815          183
    திருவள்ளூர்         1467          149
    சென்னை            1609          104
    திருநெல்வேலி    1051           125
    வேலூர்                 748          114
    மதுரையில் மட்டும் இயல்பை விட, 1 சதவீதம் குறைவான அளவில் மழை பதிவானது. மதுரையில் மூன்று மாதத்தின் சராசரி மழை 419 மி.மீட்டர் மழையாகும்.
    (இயல்பை விட, 19 சதவீதம் கூடுதலாக இருந்தால், அதிகப்படியான அல்லது கூடுதல் மழை என்று கணக்கில் கொள்ளப்படும்)
    புதுச்சேரியில்: புதுச்சேரியில் இயல்பைக் காட்டிலும் அதிகப்படியான மழை பதிவாகியுள்ளது. மாநிலம் முழுவதும் 1,472 மி.மீட்டர் மழை கிடைத்துள்ளது. இங்கு 3 மாதத்தின் சராசரி மழை 916 மி.மீட்டராகும்.
    அந்த மாநிலத்திலுள்ள காரைக்கால் மாவட்டத்தில், 1,316 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. இயல்புநிலை விட, புதுச்சேரியில் 61 சதவீதமும், காரைக்காலில் 26 சதவீதமும் அதிக மழை கிடைத்துள்ளது என வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.
     


     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp