சுடச்சுட

    

    பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் ரகளை:நாற்காலிகள் உடைப்பு; 15 பேர் கைது

    By விழுப்புரம்  |   Published on : 08th July 2016 03:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    bjp

    விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் முன்னாள் நிர்வாகிகள் சிலர் தங்களது ஆதரவாளர்களுடன் ரகளையில் ஈடுபட்டனர். இதில் நாற்காலிகள், ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

    இதுதொடர்பாக, கட்சியினர் 15 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    விழுப்புரத்தில் மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு நடைபெற்றது. கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், கட்சியினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது.

    முன்னாள் நிர்வாகிகள் சிலர், கூட்டத்துக்கு தங்களை ஏன் அழைக்கவில்லை எனக் கூறி, நாற்காலிகளை தூக்கி வீசி, மண்டபத்திலிருந்த டியூப் லைட், வாயில் பகுதி கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர். மேலும், அங்கிருந்த நிர்வாகிகள் சிலரும் தாக்கப்பட்டனர்.

    இதையடுத்து, கூட்டத்தில் பங்கேற்க வந்த பாஜக நிர்வாகிகள் மண்டபத்திலிருந்து வெளியேறினர்.

    தகவலறிந்த விழுப்புரம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்விநாயகம், உதவி ஆய்வாளர் மருது ஆகியோர், தகராறில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.

    அப்போது, அங்கு வந்த பாஜக மாநில செயலர் கே.டி.ராகவன், மோதல் நடந்த இடத்தைப் பார்வையிட்டு, வெளியே சென்ற நிர்வாகிகளை அழைத்து கூட்டத்தை தொடங்கினார். ஆனால், மீண்டும் பிரச்னை ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து, ஏடிஎஸ்பி ராஜராஜன் தலைமையிலான போலீஸார் தகராறில் ஈடுபட்ட பாஜகவினரை அப்புறப்படுத்தினர்.

    இதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் மாவட்டத் தலைவர் விநாயகம் தலைமையில் பாஜக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

    பாஜக முன்னாள் மாவட்டச் செயலர்கள் போலீஸ் சேகர், வேணுகோபால், இளைஞரணி பொறுப்பாளர் ரகு ஆகியோர் கூறியது:

    விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பெரும்பான்மை சமூகத்தினர் கட்சியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

    இரு மாவட்ட கோட்டப் பொறுப்பாளரான ரமேஷ், கட்சியை குத்தகைக்கு எடுத்துக் கொண்டு, பணம் கொடுப்பவர்களுக்கு பதவியை வழங்கி வருகிறார்.

    தேர்தல் பணியாற்றியவர்கள், சிறை சென்றவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். கூட்டம் நடைபெற்றால் தகவல் கொடுப்பதில்லை. தேர்தல் நடத்தி பொறுப்பாளர்களை நியமிப்பதில்லை. தனியார் நிறுவனம் போல கட்சியை நடத்துகின்றனர்.

    இங்குள்ள 30 பேர் மட்டுமே கூட்டத்தை நடத்தி விடுகின்றனர். இதைக் கேட்ட போது கூட்டத்தில் தகராறு ஏற்பட்டது.

    இதுகுறித்து, மாநில நிர்வாகிகளிடமும் புகார் தெரித்துள்ளோம் என்றனர் அவர்கள்.

    பாஜக மாநில செயலர் கே.டி.ராகவன் கூறியது:

    தமிழகத்தில் ஜூலை 5ஆம் தேதி முதல் மாவட்டங்கள் தோறும் பாஜக செயற்குழுக் கூட்டங்களை நடத்தி, அமைப்பு ரீதியாக புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறோம். உள்ளாட்சித் தேர்தலுக்கு தயார்படுத்த ஆலோசனை நடத்தினோம்.

    புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதில், வாய்ப்பிழந்த சிலர் பிரச்னை செய்துள்ளனர். கூட்டத்துக்கு உரிய நிர்வாகிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. பதவியில்லை, அழைப்பில்லை என்று நடைபெற்ற மோதல் ஏற்புடையதல்ல.

    இதுதொடர்பான அறிக்கையை மாநில தலைமையிடம் வழங்குவோம். அவர்கள் விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள். உண்மையான தொண்டர்களை பாஜக புறக்கணிக்காது என்றார் அவர்.

    விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் அளித்த புகாரின் பேரில், தகராறில் ஈடுபட்டதாக சேகர், வேணுகோபால் உள்ளிட்ட 15 பேரை தாலுகா காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai