7 பெண்களை ஏமாற்றித் திருமணம்: வங்கி ஊழியர் கைது

7 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியதாக மனைவி அளித்தப் புகாரின் பேரில், வங்கி ஊழியரை அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

7 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியதாக மனைவி அளித்தப் புகாரின் பேரில், வங்கி ஊழியரை அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

மதுரை கோ.புதூரைச் சேர்ந்த சலாமியா பானு (28), மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் அளித்தப் புகார்: கடந்த 2011-இல் திருமணம் நடைபெற்ற நிலையில் எனது கணவர் தலாக் பெற்றுக் கொண்டார். இதனால் மதுரையில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தேன். அப்போது எல்லீஸ் நகரைச் சேர்ந்த தஸ்லிமா அறிமுகமானார். தனது உறவினரான காதர்பாட்சா என்பவரை எனக்கு திருமணம் செய்து வைப்பதாகவும், அவர் அருப்புக்கோட்டையில் உள்ள வங்கிக் கிளையில் கள அலுவலராகப் பணிபுரிவதாகவும் கூறினார்.

எனது பெற்றோர் அனுமதியுடன் கடந்த மே 26-ஆம் தேதி எல்லீஸ்நகரில் உள்ள தஸ்லிமா வீட்டில் எங்களது திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பின் புதூரில் உள்ள எனது தாய் வீட்டில் குடும்பம் நடத்தி வந்தோம். இந்நிலையில் கணவர் காதர்பாட்சா ஜூலை 2-ஆம் தேதி வேலை காரணமாக வெளியூர் செல்வதாகக் கூறிச் சென்றார். அவர் சென்ற பின்பு பீரோவை பார்த்த போது, அதில் வைத்திருந்த ரூ.3 லட்சம் பணம், 8 பவுன் நகை, ஏடிஎம் அட்டை ஆகியவற்றைக் காணவில்லை. இதுகுறித்து எனது கணவருக்கு செல்லிடப்பேசிக்கு தொடர்பு கொண்டு கேட்ட போது, தான் எடுத்து வைத்திருப்பதாகவும், ரம்ஜான் பண்டிகைக்கு வந்து விடுவதாகவும் கூறினார். ரம்ஜான் பண்டிகைக்கும் அவர் வீட்டுக்கு வரவில்லை. அவரது செல்லிடப்பேசியும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் குறித்து விசாரித்து போது, காதர்பாட்சா, சென்னையைச் சேர்ந்த நிர்மலா, திண்டுக்கல்லைச் சேர்ந்த ஜமுனாராணி, வத்தலகுண்டைச் சேர்ந்த மகாலெட்சுமி உள்பட 7 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார் என்பது தெரிய வந்தது. எனவே என்னை ஏமாற்றி திருமணம் செய்த காதர்பாட்சா, அதற்கு உடந்தையாக இருந்த தஸ்லிமா, அவரது கணவர் அப்துல்கியூம், கீழமாத்தூரைச் சேர்ந்த இமாம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீஸார், வங்கி ஊழியர் விளாத்திகுளத்தைச் சேர்ந்த காதர்பாட்சா, தஸ்லிமா, அவரது கணவர் அப்துல்கியூம், கீழமாத்தூர் ஜமாத் நிர்வாகி ஜாகிர்உசேன் ஆகிய 4 பேரிடமும் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தினர். இந்நிலையில் காதர்பாட்சாவை திங்கள்கிழமை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com