ஷெல் எரிவாயு திட்ட விவகாரம்: தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

ஷெல் எரிவாயு திட்ட விவகாரத்தில், தமிழக அரசின் நிலைபாடு குறித்து ஜூலை 22-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என

ஷெல் எரிவாயு திட்ட விவகாரத்தில், தமிழக அரசின் நிலைபாடு குறித்து ஜூலை 22-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் புதன்கிழமை உத்தரவிட்டது.
 காவிரி டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் படிமப் பாறை எரிவாயு (ஷெல் எரிவாயு) எடுப்பதற்கு, மத்திய அரசு கடந்த 2013-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
 இந்தத் திட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி, காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் பி.ஆர்.பாண்டியனும், காவிரி குத்தகை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் முருகனும் கடந்த ஆண்டு தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
 இந்த வழக்கில், இந்திய அரசின் எண்ணெய் இயற்கை எரிவாயு நிறுவனம் (ஓஎன்ஜிசி) சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், குத்தாலம் என்ற இடத்தில், படிமங்கள் ஆராய்ச்சி செய்யவும், ஷெல் எரிவாயு எடுப்பதற்கும் அனுமதி கோரி ஜனவரியில் அளித்த விண்ணப்பத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இதுவரை அனுமதி வழங்கவில்லை. ஆகையால், இந்த அனுமதி வழங்கும் வரை பணிகள் ஏதும் தொடங்கப்படமாட்டாது என்று அதில் குறிப்பிட்டு இருந்தது.
 திரும்பப்பெற வேண்டும்: இந்நிலையில், இந்த வழக்கு, தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் ஜோதிமணி, சுற்றுச்சூழல் நிபுணர் பி.எஸ்.ராவ் ஆகியோர் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆஜராகி, மீத்தேன் எரிவாயுத் திட்டத்தைத் தடை செய்து, தமிழக அரசு முடிவு எடுத்ததைப் போலவே, ஷெல் எரிவாயு எடுப்பதற்கும் அனுமதி இல்லை என்று தமிழக அரசு முடிவு எடுத்து, இந்தத் தீர்ப்பாயத்தில் அறிக்கையாக அளிக்க வேண்டும். இது குறித்து மத்திய அரசுக்கும் திட்டவட்டமாகத் தெரியப்படுத்த வேண்டும் என வாதிட்டார்.
 மேலும், ஓஎன்ஜிசி தாக்கல் செய்த பதில் மனுவில், ஷெல் எரிவாயு திட்டங்களை எதிர்த்து உயர் நீதிமன்றத்திலும், தீர்ப்பாயத்திலும் வழக்கு தொடர்ந்து போராடி வரும் விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், ஒப்பந்தக்காரர்களை மிரட்டிப் பணம் பெறுகிறார் என்றும், பணம் சம்பாதிக்கவே இந்தத் திட்டத்தை எதிர்க்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளது.
 இந்தக் குற்றச்சாட்டு, கட்சிப் பாகுபாடின்றி, காவிரி விவசாயிகளையும், தன்னலம் இன்றிப் போராடி வருபவரின் நன்மதிப்பை மிகவும் பாதிக்கும் என்பதால், ஓஎன்ஜிசி நிறுவனம் வருத்தம் தெரிவித்து அந்தக் கருத்தைத் திரும்பப்பெற வேண்டும் என நடுவர்களிடம் வைகோ கோரிக்கை விடுத்தார்.
 தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க உத்தரவு:
 பொது நலனுக்காகப் பாடுபடுகிறவர்கள் மீது ஆதாரம் இல்லாமல் களங்கம் கற்பித்துக் குற்றம் சாட்டுவது முறையல்ல. எனவே, அடுத்த அமர்வில் தகுந்த ஆதாரங்களை ஓஎன்ஜிசி சமர்ப்பிக்காவிட்டால், குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
 ஷெல் எரிவாயு பிரச்சினையில், தமிழக அரசு தகுந்த நிபுணர்களைக் கொண்டு ஆலோசித்து, ஒரு திட்டவட்டமான நிலைப்பாட்டை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட தீர்ப்பாய நடுவர்கள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜூலை 22- ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com