Enable Javscript for better performance
5 ஆண்டுகளில் காணாமல் போன குழந்தைகள் பற்றிய விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    5 ஆண்டுகளில் காணாமல் போன குழந்தைகள் பற்றிய விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    By  சென்னை,  |   Published on : 03rd June 2016 01:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் காணாமல் போன குழந்தைகளைப் பற்றிய விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
     சென்னை உயர் நீதிமன்றத்தில், "எக்ஸ்னோரா இன்டர்நேஷனல்' என்ற தன்னார்வ அமைப்பின் நிறுவன தலைவர் எம்.பி.நிர்மல் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், "சென்னையில் சாலையோரத்தில் பெற்றோருடன் உறங்கிய 8 மாத, 9 மாத குழந்தைகள் அண்மையில் கடத்தப்பட்டனர்.
     குழந்தைகளை மீட்க வேண்டும்: வீடுகள் இன்றி, பெற்றோருடன் சாலையோரத்தில் வசித்து வரும் குழந்தைகள் கடத்தப்பட்டு வருகின்றனர். கடத்தப்படும் குழந்தைகளை உடனே மீட்க வேண்டும் என, நானும், தயா பவுண்டேஷன், நடிகர் பார்த்திபன் ஆகியோரும் கடந்த மார்ச் 28-இல் காவல்துறை ஆணையரிடம் மனு அளித்திருக்கிறோம்.
     காணாமல் போன குழந்தைகளை மீட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்' என மனுவில் கோரியிருந்தார்.
     இந்த மனு கடந்த ஏப்ரலில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையை ஜூன் முதல் வாரத்துக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன்படி, நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை, மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
     விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்: அப்போது, இந்த வழக்கில் தாமாக முன்வந்து தமிழக உள்துறைச் செயலாளரை எதிர் மனுதாரராக நீதிபதிகள் இணைத்தனர்.
     மேலும் தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் காணாமல் போன குழந்தைகள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை, மீட்கப்பட்ட குழந்தைகள் விவரம், கண்டறிய முடியாமல் மூடப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை, குழந்தைகள் கடத்தல் தொடர்பாக விசாரணையில் இருக்கும் வழக்குகள், அவற்றின் தற்போதைய நிலை என்ன? என்பன உள்ளிட்ட விவரங்களை விரிவாக நீதிமன்றத்தில், மாநில உள்துறை செயலாளர் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
     மேலும் வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 16-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். நாடு முழுவதும் குழந்தைகள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளது குறித்து, கடந்தாண்டு உச்ச நீதிமன்றமே கவலையை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai