சுடச்சுட

    

    தமிழக எம்.பி.க்கள் ஒத்துழைத்தால் நாடாளுமன்றத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க ஏற்பாடு: தருண் விஜய்

    By dn  |   Published on : 19th June 2016 02:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tarun

    தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைத்தால் நாடாளுமன்ற வளாகத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, பாஜகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் தெரிவித்தார்.

    ஹரித்துவாரில் கங்கைக் கரையோரம் திருவள்ளுவர் சிலையை நிறுவும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாதிரி சிலையை கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை முன் வைத்து கொண்டு செல்வதற்காக சனிக்கிழமை கன்னியாகுமரிக்கு வந்திருந்தார் தருண் விஜய். பின்னர், மதுரை செல்லும் வழியில் திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் அவருக்கு மாவட்ட பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

    நாடு முழுவதும் திருக்குறளின் சிறப்பை பரப்பும் பணியில் ஈடுபடுவதில் பெருமை கொள்கிறேன். வேறு எந்த நூல்களுக்கும் இல்லாத வகையில் சிறப்புக்குரியது திருக்குறள். தொன்மை வாய்ந்த மொழியாம் தமிழின் பெருமையை எடுத்துக் காட்டுவதுடன் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான நூலாகவும் உள்ளது. இத்தகைய சிறப்புமிக்க நூலை வடிவமைத்த திருவள்ளுவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் ஹரித்துவாரில் வரும் 29ஆம் தேதி முழு உருவச் சிலை நிறுவப்படவுள்ளது. அதற்கு முன்பாக மாதிரி சிலையுடன் கன்னியாகுமரி தொடங்கி கங்கை வரை யாத்திரை சென்று திருவள்ளுவரின் புகழ் பரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளேன். கங்கைக் கரையில் மட்டுமல்லாது நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் திருவள்ளுவர் சிலை வைக்க வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் திருக்குறளை கட்டாயப் பாடமாக்க வேண்டும்.

    நாடாளுமன்ற வளாகத்தில் திருவள்ளுவர் சிலை இல்லை எனக் கூறுகின்றனர். தமிழக எம்.பி.க்கள் ஒத்துழைத்தால் இதற்காக குரல் கொடுத்து சிலை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக தமிழக முதல்வரையும் சந்தித்துப் பேச தயாராகவுள்ளேன் என்றார்.

    இந்த வரவேற்பு நிகழ்ச்சியில், கோட்ட பொறுப்பாளர் ராஜா கண்ணன், மாவட்டத் தலைவர் தயா சங்கர், மாவட்ட பொதுச் செயலர் பாலாஜி கிருஷ்ணசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai