கல்விக் கடனை வசூலிக்க தனியார் நிறுவனம் மூலம் மிரட்டல் விடுப்பதா?:அன்புமணி கண்டனம்

கல்விக் கடனை வசூலிக்க வங்கி நிர்வாகம், தனியார் நிறுவனம் மூலம் மிரட்டல் விடுத்த சம்பவத்துக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்தார்.
கல்விக் கடனை வசூலிக்க தனியார் நிறுவனம் மூலம் மிரட்டல் விடுப்பதா?:அன்புமணி கண்டனம்

கல்விக் கடனை வசூலிக்க வங்கி நிர்வாகம், தனியார் நிறுவனம் மூலம் மிரட்டல் விடுத்த சம்பவத்துக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்தார்.

இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

கல்விக் கடனை வசூலிக்க பாரத ஸ்டேட் வங்கி கொடூரமான வழிமுறையை கையில் எடுத்துள்ளது. மாணவர்களுக்கு வழங்கிய கல்விக் கடன்களில் தவணை தவறிய கடன்களை தனியார் (ரிலையன்ஸ்) நிறுவனத்திடம் பாரத ஸ்டேட் வங்கி விற்றுள்ளது. மேலும் மாணவர்களிடமிருந்து முழுத் தொகையையும் வசூலித்துக் கொள்ள அந்த நிறுவனத்துக்கு அனுமதி அளித்துள்ளது. இந்தச் செயல் கண்டிக்கத்தக்கதாகும்.

பாரத ஸ்டேட் வங்கி மூலம் வழங்கப்பட்ட கல்விக் கடனில் ரூ.847 கோடி வாராக் கடனாக மாறியுள்ளது. இந்தக் கடன்கள் 45 சதவீத தொகைக்கு தனியார் நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கல்விக்கடனை உடனடியாக திரும்பச் செலுத்தாவிட்டால் மோசமான நடவடிக்கைகள் மேற்கொள்ள நேரிடும் என்று மாணவர்களுக்கு அந்த நிறுவனம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் அச்சத்தில் உறைந்திருக்கின்றனர்.

ரூ.847 கோடி வாராக் கடனில், ரூ.381 கோடியை மட்டுமே தனியார் நிறுவனம் வங்கிக்கு வழங்கும். முதலில் ரூ.54.24 கோடியை வழங்கியுள்ள நிறுவனம், மீதமுள்ள தொகையை அடுத்த 15 ஆண்டுகளில் படிப்படியாக வழங்கும். ரூ.54 கோடி பணத்துக்காக லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கி விடக்கூடாது. ஒருவர் பெயரில் வாங்கும் கடனை அவரது ஒப்புதல் இல்லாமல் பிறருக்கு மாற்றித் தருவது கந்துவட்டி வசூலிக்கும் குற்றத்துக்கு இணையானது.

பாரத ஸ்டேட் வங்கியின் முடிவால் வேலையில்லா பட்டதாரிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்னையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா உடனடியாகத் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com