Enable Javscript for better performance
தாய், 3 மகள்கள் கொலை: படுபாதக செயலில் ஈடுபட்டது ஏன்? குற்றவாளி வாக்குமூலம்- Dinamani

சுடச்சுட

    

    தாய், 3 மகள்கள் கொலை: படுபாதக செயலில் ஈடுபட்டது ஏன்? குற்றவாளி வாக்குமூலம்

    By dn  |   Published on : 25th June 2016 10:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    28

    சென்னை: சென்னை ராயப்பேட்டையில் தாயையும், 3 மகள்களையும் கொலை செய்துவிட்டு, 4 நாள்களாக சடலங்களுடன் வாழ்ந்த கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

     இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

    ராயப்பேட்டை முத்து தெருவைச் சேர்ந்தவர் சின்னராஜ் (35). இவர் அங்குள்ள ஒருவீட்டின் முதல் தளத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி பாண்டியம்மாள் (38), மகள்கள் பவித்ரா (19), பரிமளா (18), சினேகா (16).

    இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு இவர்கள் வசித்து வந்த வீட்டில் அதிகமாக துர்நாற்றம் வீசியதால், அங்கு யாராலும் இருக்க முடியவில்லை. இதையடுத்து வீட்ட உரிமையாளர் ராஜா பகதூர், ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். தகவலறிந்த ராயப்பேட்டை போலீஸார், அங்கு விரைந்து வந்து சின்னராஜ் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது பாண்டியம்மாள், பவித்ரா, பரிமளா ஆகியோர் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டும், சினேகா அயன் பாக்ஸ் வயரால் கழுத்து இறுக்கியும் கொலை செய்யப்பட்டும் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    27.jpg 

     உடனே போலீஸார், 4 பேர் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை மயிலாப்பூர் துணை ஆணையர் வி.பாலகிருஷ்ணன், உதவி ஆணையர் ஜி.சங்கர் ஆகியோர் பார்வையிட்டு, விசாரணை செய்தனர். முதல் கட்ட விசாரணையில், குடும்பப் பிரச்னையில் சின்னராஜ் தான், 4 பேரையும் கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து, தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் தேடினர். இதற்கிடையே மெரீனா கடற்கரையில் பதுங்கியிருந்த சின்னராஜை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

    விசாரணையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவிலேயே 4 பேரையும் சின்னராஜ் கொலை செய்ததும், பின்னர் 4 நாள்கள் சடலங்களுடன் அவர் அந்த வீட்டிலேயே தங்கியிருந்ததும் தெரியவந்தது.

    கொலைக்கான காரணம்: போலீஸாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்:

    சின்னராஜ், பாண்டியம்மாளின் மூத்த மகள் பவித்ராவை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கேட்டாராம். ஆனால் பாண்டியம்மாள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து மறுத்துள்ளார்.

    அதன் பின்னர் கணவர்-மனைவி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் பாண்டியம்மாள், சின்னராஜ் மீது நம்பிக்கை இழந்துள்ளார். இதன் விளைவாக வீட்டின் முன் அறையில் சின்னராஜை படுக்க வைத்துவிட்டு, பாண்டியம்மாள் தனது 3 மகள்களுடன் படுக்கை அறையில் படுத்துள்ளார்.

    chennai_murder_building.jpeg 

    இவ்வாறு கடந்த பல மாதங்களாக பாண்டியம்மாள் இருந்துள்ளார். இதனால் சின்னராஜ் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவது, பாண்டியம்மாளை அடிப்பது என இருந்துள்ளார். இதேபோல திங்கள்கிழமை இரவும் பாண்டியம்மாளுக்கும், சின்னராஜுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறுக்கு பின்னர், பாண்டியம்மாள் படுக்கை அறையில் தனது மகள்களுடன் படுத்து தூங்கியுள்ளார். ஆனால், அவர் படுக்கை அறைக் கதவை சரியாக பூட்டவில்லையாம். இந்த நிலையில் ஆத்திரத்தில் இருந்த சின்னராஜ் செவ்வாய்க்கிழமை அதிகாலை எழுந்து, பாண்டியம்மாள் படுக்கை அறைக்குள் சென்றுள்ளார். அங்கு கிடந்த இரும்புக் கம்பியால் முதலில் தூங்கிக் கொண்டிருந்த பாண்டியம்மாளை அடித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் பவித்ரா, பரிமளா ஆகியோரை அடுத்தடுத்து கொலை செய்துள்ளார். இச் சம்பவத்தில் சத்தம் கேட்டு எழுந்த சினேகாவையும் அங்கு கிடந்த அயன் பாக்ஸ் வயரால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்.

    அதன் பின்னர், வியாழக்கிழமை இரவு வரை எதுவுமே நடைபெறாததுபோல அக்கம் பக்கத்தினரிடம் சின்னராஜ் நடந்துகொண்டுள்ளார். இதில் பாண்டியம்மாளும், அவரது மகள்களும் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களிடம் நெருக்கமாக பழகமாட்டார்கள் என்பதால் யாருக்கும் அவர் மீது சந்தேகம் ஏற்படவில்லை. வியாழக்கிழமை காலை துர்நாற்றம் வீசிய பின்னரே, சின்னராஜ் தலைமறைவாகியுள்ளார்.

    இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார், சின்னராஜுவிடம், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே வீட்டில் 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம், அந்தப் பகுதி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai