சுவாதி கொலை வழக்கு: 5 நாள்களாகியும் துப்பு துலங்கவில்லை?

 பொறியாளர் சுவாதி கொலை வழக்குத் தொடர்பாக, 5 நாள்களாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டும் துப்பு துலங்கவில்லை என்று கூறப்படுகிறது.
சுவாதி கொலை வழக்கு: 5 நாள்களாகியும் துப்பு துலங்கவில்லை?

 பொறியாளர் சுவாதி கொலை வழக்குத் தொடர்பாக, 5 நாள்களாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டும் துப்பு துலங்கவில்லை என்று கூறப்படுகிறது.

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-இல் மர்ம நபரால் கொலை செய்யப்பட்டார்.

ரயில்வே போலீஸார் நடத்திய விசாரணையை பெருநகர காவல் துறை விசாரிக்க டி.ஜி.பி. அசோக் குமார் திங்கள்கிழமை உத்தரவிட்டார். இந்த வழக்கை விசாரிக்க முதலில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

பின்னர் தனிப்படைகள் 8-ஆக உயர்த்தப்பட்டுள்ளன. 8 தனிப்படை போலீஸாரும் பல்வேறு கோணங்களில் வழக்கை விசாரித்து வருகின்றனர்.

கொலை தொடர்பாக சுவாதி செல்லும் வழியில் உள்ள கண்காணிப்பு கேமராகளில் பதிவான காட்சிகளை போலீஸார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும், அவரது குடும்பத்தினர், தோழிகளிடம் நடத்திய விசாரணையில், சில தகவல்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தனர்.

ஆனால் கொலை நடந்து 5 நாள்களாகியும் இந்த கொலை வழக்கில் துப்புத் துலங்கவில்லை.

வீடு, வீடாக விசாரணை: இந்த நிலையில், குற்றவாளியை அடையாளம் காணும் வகையில் சூளைமேடு, நுங்கம்பாக்கம், சௌராஷ்டிரா நகர், நாராயணபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாக 50-க்கும் மேற்பட்ட போலீஸார் புதன்கிழமை சென்று விசாரணை நடத்தினர். அப்போது மர்ம நபரின் புகைப்படம், வீடியோ காட்சியைக் காட்டி, குற்றவாளி குறித்த தகவல்களை போலீஸார் கேட்டறிந்து வருகின்றனர்.

இதற்கிடையே நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து பரனூரில் உள்ள அலுவலகம் வரை அந்த நபர் தன்னை பின்தொடர்ந்து வந்ததாக இருமுறை செல்லிடப்பேசியில் அச்ச உணர்வோடு சுவாதி பேசியதாக அவரது நண்பர் தெரிவித்துள்ளார்.

இதனால், அந்த மர்ம நபர் ஒருதலையாக சுவாதியை காதலித்தாரோ என்ற சந்தேகம் போலீஸாருக்கு ஏற்பட்டுள்ளது.

திருநங்கைகளிடம் விசாரணை: சம்பவம் நடக்கும்போது அங்கு இருந்த 2 திருநங்கைகளிடம் நடத்தப்பட்ட விசாரணையிலும், சில தகவல்கள் கிடைத்துள்ளன.

மைசூரில் இரு தனிப்படையினர்:மைசூரில் 6 மாதங்கள் சுவாதி தங்கி பயிற்சி பெற்று, சில மாதங்கள் பணிபுரிந்தார். அவர் அங்கு பணி செய்த காலத்தின்போது ஏதேனும் பிரச்னை ஏற்பட்டதா என்பது குறித்து விசாரிக்க இரு தனிப்படையினர் அங்கு முகாமிட்டுள்ளனர்.

அங்கு அவரோடு தங்கியிருந்தவர்கள், பணிபுரிந்தவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது.

இதுதவிர, சுவாதியை கொலை செய்ய பயன்படுத்திய அரிவாளும், கர்நாடக மாநிலம் குடகு பகுதியைச் சேர்ந்த குறிப்பிட்ட சமுதாய மக்கள் பயன்படுத்துவது என்பதால் இதுதொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இருப்பினும், 5 நாள்களாக தீவிரமாக விசாரணை நடத்தியும் குற்றவாளி குறித்த துப்பு முழுமையாகக் கிடைக்கப் பெறவில்லை என்று காவல் துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.

5 லட்சம் செல்லிடப்பேசி அழைப்புகள் ஆய்வு

சுவாதி கொலை வழக்கில் துப்பு துலக்குவதற்காக 5 லட்சம் செல்லிடப்பேசி அழைப்புகளை சைபர் குற்றப்பிரிவு போலீஸார் ஆய்வுக்கு உள்படுத்தியுள்ளனர்.

நுங்கம்பாக்கத்தில் சம்பவம் நடந்த நாளன்று, காலை 6 மணியில் இருந்து 7 மணி வரை அந்தப் பகுதிக்கு வந்த அனைத்து செல்லிடப்பேசி அழைப்புகளையும் போலீஸார் கடந்த இரு நாள்களாக ஆய்வு செய்தனர். அந்த நேரத்தில் சுமார் 5 லட்சம் செல்லிடப்பேசி அழைப்புகள் பதிவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

தேவையானவற்றை முதல் கட்டமாக தணிக்கை செய்துள்ளனர். அடுத்த கட்டமாக, சந்தேகத்துக்குரிய எண்களை மட்டும் விசாரித்து, கண்காணித்து வருகின்றனர்.

இதேபோல, சுவாதிக்கு கடந்த 6 மாதத்தில் வந்த அழைப்புகளையும், பிறரிடம் அவர் பேசிய அழைப்புகளையும் போலீஸார் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதில், கொலையாளி செல்லிடப்பேசியைப் பயன்படுத்தியிருந்தால், கண்டிப்பாக அவரைப் பற்றிய விவரங்கள் தெரிந்துவிடும் என காவல் துறையினரால் நம்பப்படுகிறது.

ஓய்.ஜி. மகேந்திரன் வீட்டுக்கு பாதுகாப்பு: இந்த நிலையில், சுவாதி கொலை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால் பல்வேறு தரப்பில் கண்டனம் எழுந்ததால், தியாகராயநகர் கிரி சாலையில் உள்ள ஒய்.ஜி.மகேந்திரனின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவர் தனது முகநூல் பக்கத்துக்கு வந்த ஒரு பதிவை, பிறருக்கு பகிர்ந்திருந்தார். எதிர்ப்பையடுத்து, அவர் விளக்கம் அளித்து முகநூலில் மன்னிப்பும் கேட்டதாகத் தெரிகிறது. இருப்பினும் விமர்சனங்களும், கண்டனங்களும் தொடர்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com