சுடச்சுட

  

  காதலித்த கலப்பு திருமணத்தின் அவமானத்தால் கொலை செய்தோம்: கெளசல்யா தந்தை வாக்கு மூலம்

  By DN  |   Published on : 22nd March 2016 02:26 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  gows---sankar

  கலப்பு திருமணம் செய்ததால் உடுமலையில் மாணவர் சங்கரை கொலை செய்தோம் என்று கெளசல்யாவின் தந்தை சின்னச்சாமி வாக்குமூலம் அளித்துள்ளார்.

  கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்.13) சாதி மாறி காதலித்து திருமணம் செய்து கொண்ட காரணத்துக்காக சங்கர்-கௌசல்யா தம்பதியை 6 பேர் கொண்ட கும்பல் உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் பட்டப்பகலில் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் சங்கர் உயிரிழந்தார். கௌசல்யா தலையில் பலத்த காயங்களுடன் கோவை அரசு மருத்துமவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  தமிழகத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்திய உடுமலை ஆணவக்கொலை வழக்கில் கெளசல்யாவின் தந்தை சின்னச்சாமி திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

  இதையடுத்து கெளசல்யாவின் அப்பா சொல்லியே இந்த கொலையை செய்ததாக கைது செய்யப்பட்ட 5 பேரும் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.

  இந்த நிலையில், காவல் நிலையத்தில் சரணடைந்த கௌசல்யாவின் தந்தை சின்னசாமியை காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினர் முடிவு செய்தனர்.

  இதையடுத்து, சின்னசாமி பலத்த பாதுகாப்புடன் உடுமலை குற்றவியல் நடுவர் மன்றத்துக்கு திங்கள்கிழமை அழைத்து வரப்பட்டார். பின்னர் நீதிபதி ஸ்ரீவித்யா முன்பு அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

  அப்போது, சின்னசாமியை காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறை சார்பில் மனு அளிக்கப்பட்டது.  இதைத் தொடர்ந்து, சின்னசாமியை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி ஸ்ரீவித்யா உத்தரவிட்டார்.

  இதைத்தொடர்ந்து சின்னசாமியை போலீஸார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது சங்கர் கொலை தொடர்பாக சின்னசாமி போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்தார். இதனை போலீசார் வீடியோவில் பதிவு செய்தனர்.

  சின்னசாமி வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:

  எனது மகள் கெளசல்யா வேறு சாதியை சேர்ந்த சங்கரை திருமணம் செய்து கொண்டதில் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் விருப்பமில்லை, இதனால் உறவினர்களை அனுப்பி சங்கரிடம் ரூ.10 லட்சம் தருகிறோம், கெளசல்யாவை எங்களுடன் அனுப்பிவிடு என்று கேட்டோம். அவரோ, நான் கெளசல்யாவை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன் என கூறினார். இதையடுத்து கணவரை பிரிந்து எங்களுடன் வந்து விடுமாறு கெளசல்யாவையும் பல முறை அழைத்தோம். ஆனால் வாழ்ந்தால் காதல் கணவரோடுதான் வாழ்வேன் என கூறி விட்டார். இது எனக்கு வேதனையாக இருந்தது.

  எனது மகளின் இந்த செயலால் உறவினர்கள் என்னை கேவலமாக பேசினார்கள். என்னால் கோவில் விழா உள்பட வெளியே எங்கேயும் செல்ல முடியவில்லை. இது எனக்கு அவமானமாக இருந்தது. எங்களுடன் வராவிட்டால் உன்னையும், உனது கணவரையும் தீர்த்துக் கட்டி விடுவோம் என கெளசல்யாவை மிரட்டியும் கெளசல்யா வரவில்லை.

  எனவே, சங்கரை தீர்த்துக் கட்டி விட்டு கெளசல்யாவை அழைத்து வாருங்கள், வர மறுத்தால் அவளையும் தீர்த்துக் கட்டி விடுங்கள் என எனது டிராவல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்த கார் ஓட்டுநர் ஜெகதீசனிடம் கூறினேன்.

  இதையடுத்து அவர் நண்பர்களுடன் சேர்ந்து சங்கரை கொலை செய்ய திட்டம் தீட்டினார். அதன்படி தனராஜ் என்பவரை உடுமலைக்கு அனுப்பி சங்கரின் அன்றாட நடவடிக்கைகளை கண்காணித்து தக்க தருணத்தில் அவரை கொலை செய்து விட்டனர். கெளசல்யா வர மறுத்ததால் அவளை அரிவாளால் தாக்கியதாக கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai