Enable Javscript for better performance
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவிக்கு திமுகவில் கடும் போட்டி: கழகத்தில் கலகமா..?- Dinamani

சுடச்சுட

    

    எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவிக்கு திமுகவில் கடும் போட்டி: கழகத்தில் கலகமா..?

    By dn  |   Published on : 21st May 2016 10:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    karunanidhi

    சட்டப் பேரவை திமுக குழுத் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்படுவார் என்று உறுதியாகக் கூறப்படும் நிலையில், அவர் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்பார் என்பது தெளிவாகிறது. ஆனால், துணைத் தலைவர் பதவிக்கு திமுகவில் கடும் போட்டியே நிலவி வருகிறது.

    இதுவரை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு தமிழகத்தில் பலம் பொருந்திய எதிர்க்கட்சியாக திமுக அமர உள்ளது.  1984-இல்  காங்கிரஸ் கட்சி 61 எம்எல்ஏக்களுடன் எதிர்கட்சியாக அமர்ந்தது. இந்தச் சாதனையை 2006-இல் அதிமுக முறியடித்தது. அந்தத் தேர்தலில் அதிமுகவும் இதே அளவுக்கு எட்டிப் பிடித்து, ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவரானார்.

    இந்த நிலையில் நடைபெற்று முடிந்த தேர்தலில் திமுகவும் 89 எம்எல்ஏக்களுடன் பலம் பொருந்திய எதிர்க்கட்சியாக பேரவையில் நுழைய உள்ளது.

    திமுகவை பொருத்தவரை ஆளும்கட்சியாக இருக்கும்போது திமுக தலைவர் கருணாநிதி சட்டப் பேரவைக் குழு தலைவராக (முதல்வராக) தேர்வு செய்யப்படுவார். ஆனால், எதிர்க்கட்சியாக இருக்கும்போது பேராசிரியர் க.அன்பழகனை தேர்வு செய்ய ஆதரவுக் கரம் நீட்டுவார்.  ஆனால், 2011-ஆம் ஆண்டில் சட்டப் பேரவைக் குழுத் தலைவராக ஸ்டாலினுக்கு இருவரும் ஆதரவு தெரிவித்து, வழிவிட்டனர். இதே நிலையையே இந்த முறையும் கருணாநிதி மேற்கொள்வார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இதன்படி, ஸ்டாலினே எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்பார் என்றும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

    இருப்பினும், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவிக்கு திமுகவில் கடும் போட்டி நிலவுகிறது.  முந்தைய பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருந்த துரைமுருகன் மீண்டும் பதவியை பெற்றுவிட நினைக்கிறார். இதே நேரத்தில், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, எ.வ.வேலு, பொன்முடி போன்ற முக்கிய தலைவர்களும் இந்த பதவியை பெற்றுவிட முடியுமா என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

    இருப்பினும்,  திமுக கொறடாவாக ஏற்கனவே சில முறை இருந்துவந்த ஓட்டன்சத்திரம் சக்கரபாணியே மீண்டும் தேர்வு பெற வாய்ப்பு இருப்பதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. இருப்பினும், துணைத் தலைவர் பதவி கிடைக்காத முன்னணித் தலைவர்கள் கொறடா பதவியையாவது பெற்றுவிட முனைப்புடன் இருப்பதால், இதற்கும் போட்டியே நிலவுகிறது. இதனால், இரு முக்கிய பதவிகளில் யார் பெறுவார்கள் என்பதில் பட்டிமன்றமே நடக்கிறது.

    கடும் போட்டியினும் காரணமாக, இரு பதவிகளில் தலித்துகள், பெண்கள், சிறுபான்மையினரின் ஆதரவை திரட்டும் வகையில்  அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இருப்பினும், ஸ்டாலினின் ஆதரவு பெற்றவர்கள்தான் இருப்பார்கள் என்பதால், அவரது ஆதரவு யாருக்கு என்பது புரியாத புதிராக உள்ளது. இந்த நிலையில், பேரவையில் ஸ்டாலினை கடந்த முறை துரைமுருகன் ஓவர்டேக் செய்து  அரசியல் செய்ததை ஸ்டாலினின் ஆதரவாளர்கள் நினைவுபடுத்துகின்றனர். இதன்காரணமாக,  துரைமுருகனை ஓரம் கட்ட வைக்க முயற்சியும் நடப்பதாக அவரது ஆதரவாளர்கள் குமுறுகின்றனர்.

    இதுஒருபுறமிருக்க திமுக தோல்விக்கு ஸ்டாலின் தலைமை ஏற்றதுதான் காரணம் என்று அஞ்சாநெஞ்சர் அழகிரி ஓரிரு நாள்களில் அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்த உள்ளாராம். இது  புயலை கிளப்புமா....

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai