Enable Javscript for better performance
பணிப் பாதுகாப்பில்லாத மூன்றாம் நிலை நூலகர்கள்!- Dinamani

சுடச்சுட

    
    Library


    புதுக்கோட்டை: நூலகத் துறையில் ஒரே பணியில் பாதுகாப்பும், அரசின் எவ்வித சலுகைகளோ, உதவிகளோ கிடைக்காமல் மூன்றாம் நிலை நூலகர்கள் கடந்த பல ஆண்டுகளாகப் பணியாற்றி வருகின்றனர்.
    ஒரு நல்ல சமுதாயம் சிறந்த முறையில் வளர வேண்டும் என்றால் நல்ல சிந்தனை, இலக்கியம், மொழி வளர வேண்டும். அதற்குக் கற்றோர், அறிவு சார்ந்தோர் பொதுமக்களிடம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கு ஊர்தோறும் நூலகங்கள் திறந்து அறிவை வளர்க்க வேண்டும் என்றார்கள்.
    ஓர் ஊரில் நூலகம் திறக்கப்படுகிறது என்றால், அங்கு ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது என்பர். அறிஞர் அண்ணா புத்தகம் படிப்பதற்காக அறுவைச் சிகிச்சையையே தள்ளிவைக்கச் சொன்னார். தூக்கு மேடையில் இருந்த பகத் சிங் படிப்பதற்கு மட்டுமே நேரம் கேட்டதாகக் கூறுவர். நெல்சன் மண்டேலா தனிமைச் சிறையில் 27 ஆண்டுகள் இருந்த போது அவரது கோரிக்கை நூல்கள் வேண்டும் என்பதே, அம்பேத்கர் நூலகம் இருக்கும் இடத்தின் அருகில் வீடு கேட்டார். இப்படி நூலகம் குறித்து பல அறிஞர்கள் கூறியதைப் பதிவு செய்தால் பட்டியல் நீளும்.
    ஆனால், அறிவை வளர்க்க கிராமங்கள்தோறும் திறக்கப்பட்ட நூலகங்களின் தற்போதைய நிலை மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பொது நூலகத் துறைக்கு இயக்குநராக பள்ளிக் கல்வி துறை இயக்குநரே கூடுதல் பொறுப்பாகக் கவனித்து வருகிறார். கடல் போன்ற கல்வித் துறையைக் கவனிக்கவே முழு கவனத்தையும் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். எனவே, நூலகத் துறையில் அனுபவம் பெற்றவரையே நூலகத் துறை இயக்குநராக நியமிக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியும், இன்றுவரை அதைச் செயல்படுத்தாததால் நூலகத் துறை கவனிப்பாரற்ற நிலையில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
    தமிழகத்தில் 32 மாவட்ட மைய நூலகங்களும், 1,926 கிளை நூலகங்களும், 1821 ஊர்ப்புற நூலகங்களும், 14 இயங்கு நூலகங்களும், 780 பகுதி நேர நூலகங்களும் ஆக மொத்தம் 4,575 நூலகங்கள் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
    தற்போது இயக்குநர், இணை இயக்குநர், துணை இயக்குநர், 23 மாவட்ட நூலக அலுவலர்கள், 24 முதல்நிலை நூலகர்கள், 58 இரண்டாம் நிலை நூலகர்கள், 127 மூன்றாம் நிலை நூலகர்கள், 264 ஊர்ப்புற நூலகர்கள், 163 பதிவறை உதவியாளர்கள், 399 அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட 1,311 பணியிடங்கள் காலியாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. பல மாவட்டங்களில் நூலகர்கள் பணியிடம் நிரப்பப்படாமல் போனதால், அந்தப் பணியிடங்கள் காலாவதியாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
    நூலகத்தில் 1996 வரை புதிய பணியிடங்கள் தோற்றுவிக்காமல், அதன் பிறகு ரூ. 1,000 ஊதியத்தில் ஊர்ப்புற நூலகர்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். 10 ஆண்டுகளுக்குப் பிறகு அனைவரும் மூன்றாம் நிலை நூலகர்களாகத் தரம் உயர்த்தப்பட்டனர். அரசு நிதி, கருவூலம், நூலக நிதி ஆகிய 3 பிரிவுகளாக இவர்களுக்குப் பணி வழங்கப்பட்டது. ஒரே பணி, ஆனால் பணிப் பாதுகாப்பில்லாத நூலக நிதிப் பிரிவில் மூன்றாம் நிலை நூலகர்கள் பணியாற்றுகின்றனர்.
    நூலக நிதியின் கீழ் பணிபுரியும் மூன்றாம் நிலை நூலகர்களுக்கு சில்லறை செலவினத்தில் ஊதியம் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு முதல்வரின் காப்பீட்டுத் திட்டம், இறப்பு நிதி, சிபிஎஸ் மூலம் பிடிக்கப்படும் ஊதியம் என எந்தவித அரசின் பிடித்தமும் கிடையாது. மேலும், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் வீட்டுக் கடன் வசதி, வாகனக் கடன், அரசு ஊழியர் கூட்டுறவு சங்கக் கடன் உள்பட எந்தவிதப் பலன்களும் கிடையாது. மேலும், பணிக் காலத்தில் இறக்க நேரிட்டாலும் இறப்பு நிதியும், பணி ஓய்வு பெறும் போது எந்தப் பயனும் வழங்குவதில்லை. இதில் வேதனை என்னவென்றால், ஊர்ப்புற நூலகர்களாகப் பணியாற்றிய போது இவர்களுக்கு இறப்பு நிதிக்காக ரூ. 30-ம், காப்பீட்டு நிதிக்காக ரூ. 100-ம் பிடித்தம் செய்யப்பட்டது. ஆனால், மூன்றாம் நிலை நூலகராகப் பதவி உயர்வு பெற்று நூலக நிதிக்குள் வந்த பிறகு, மேற்கண்டவற்றில் எந்தப் பலனுமின்றி 10 ஆண்டுகளாக அரசுத் துறையில் பணியாற்றினாலும் அரசு ஊழியர்களாக இல்லாமல் உள்ளனர்.
    எனவே, அரசு நூலகத் துறைக்கு என தனியாக நிதி ஒதுக்கி நூலகங்களையும், நூலகர்களையும் பாதுகாக்க வேண்டும். மேலும், அவர்களுக்கு தமிழக முதல்வரின் சிறந்த திட்டமான "அம்மா' காப்பீட்டுத் திட்டம், பணிக் காலத்தில் இறக்க நேரிட்டால் ரூ. 3 லட்சம் வழங்கும் நிதியையும் வழங்க ஆவண செய்ய வேண்டும். அதோடு, இவர்களை நூலக நிதியின் கீழ் கொண்டு வந்து, அரசின் பயன்களைப் பெற வழிவகை செய்ய வேண்டும்.
    இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்டப் பொருளாளர் கி. நாகராஜன் கூறியதாவது:
    ஒவ்வோர் ஆண்டும் ஊர்ப்புற நூலகங்களைக் கிளை நூலகங்களாகத் தரம் உயர்த்தி அரசு அறிவிக்கும் போது, தற்போதுள்ள மூன்றாம் நிலை நூலகர்கள் அரசு நிதிக்கு மூப்பு அடிப்படையில் மாறும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக நூலகங்கள் தரம் உயர்த்தப்படாததால், நூலகர்கள் ஆயிரக்கணக்கானோர் பணிப் பாதுகாப்பின்றி கடந்த பல ஆண்டுகளாகப் பரிதவித்து வருகின்றனர். இதைக் கவனத்தில் கொண்டு, நூலகங்களைத் தரம் உயர்த்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்றார் அவர்.
    -ஆர். மோகன்ராம்

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai