சுடச்சுட

  
  bmk

  டாக்டர் எம். பாலமுரளிகிருஷ்ணா என்று சங்கீத உலகமறிந்த மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா தனது 86-ஆவது வயதில் சென்னையில் காலமானார்.
  அவர் ஒரு முழு சங்கீத சாகரமாக இருந்தார். வெறும் பாடகராக மட்டும் அல்லாமல், இசைக் கருவிகள் வாசிக்கத் தெரிந்தவராக இருந்தார். வாக்கேயகாரர் - அதாவது சுத்தமான சங்கீத சாகித்தியங்களை இயற்றியவர். அதோடு, புதிய ராகங்களை உருவாக்கியவர். புதிய தாளங்களை உருவாக்கியவர்.
  மிகச் சிறிய வயதிலேயே 72 மேளகர்த்தா ராகங்களை வசப்படுத்தி, அவற்றில் கீர்த்தனங்களை இயற்றியவர்.
  இசைப் பரம்பரையில் நான்காவது தலைமுறை: பாலமுரளிகிருஷ்ணாவின் சங்கீதப் பாரம்பரியம் மிகச் சிறப்பானது. தியாகய்யரின் சிஷ்ய பரம்பரையில் வந்தவர் அவர். அந்தப் பரம்பரையில் நான்காவது தலைமுறைக்காரர்.
    தியாகராஜரின் புகழ் பெற்ற சிஷ்யர்களில் ஒருவர் மானம்புசாவடி வெங்கடசுப்பையா. அவருடைய சிஷ்யர் சுசர்ல தக்ஷிணாமூர்த்தி சாஸ்திரி. அவருடைய சிஷ்யர் பாருபள்ளி ராமகிருஷ்ண பந்துலு. பாருபள்ளியின் சிஷ்யர் மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா.
  சங்கீத சுயம்பு: பாலமுரளி கிருஷ்ணாவை சங்கீத சுயம்பு என்று கூற வேண்டும். பாட்டை முறைப்படி கற்றுத் தேர்ச்சி பெற்று இசை அரங்குக்கு வந்தவர் அல்ல அவர். தந்தை புல்லாங்குழல் வித்வான். அம்மா அருமையாக வீணை வாசிப்பார். இசை என்பது வீட்டில் எப்போதும் ஒலித்துக் கொண்டிருந்தது. அந்த நாத அலையில் பாலமுரளியின் நாதமும் கலந்தது.
  இளம் வயதிலேயே...தனது இசை ஞானத்தால் மிகச் சிறிய வயதிலேயே சங்கீத உலகைக் கட்டிப் போட்டவர். தனது எட்டாவது வயதில் அரங்கேறினார். அதன் பிறகு, பற்பல ஆண்டுகள் லட்சக்கணக்கான இசை ரசிகர்களைத் தனது சங்கீதக் கடலில் திளைக்க வைத்த அவர், இனிமேல் மேடைக் கச்சேரி செய்வதில்லை என்று ஒரு நாள் திடீரென்று அறிவித்தார். இசை உலகின் உச்சத்தில் இருந்தபோதே, ஜெயக்கொடியை நாட்டி அதே நிலையில் தன்னை எல்லாருடைய நினைவிலும் நிறுத்திக் கொள்ள முடிவு செய்தார். 
    முதுமையில் தளர்ந்து, குரலை இழந்து தவித்து, ரசிகர்களையும் சிணுங்க வைக்காமல் புத்திசாலித்தனமாக ஒதுங்கிக் கொண்டார். சங்கீத கலைஞனாக மட்டுமல்லாமல், நல்ல சங்கீத சிந்தனையாளனாகவும் பாலமுரளி இருந்தார்.
    இசையும் சமயமும் இரண்டறக் கலந்த தென்னாட்டில், இசையில் பாரம்பரியத்தைக் கைவிட்டால் பெரும் குற்றமாக கருதப்படும். ஆனால், பாரம்பரியம் என்றால் என்ன என்பது பற்றி அவருக்குப் பூரணமான தெளிவு இருந்தது.
    சங்கீதம் பாரம்பரியமாகக் கிடைத்தது என்பது சரிதான். ஆனால், தியாகராஜ ஸ்வாமி இன்று இருந்தால், அவருடைய கர்நாடக இசை நிகழ்ச்சியில் ராகம், தானம், பல்லவியெல்லாம் எப்படிப் பாடுவார் என்று யாருக்குத் தெரியும்? அது சரியா, தவறா என்று நாம் சொல்ல முடியுமா?
    நம் முன்னோர் நமக்கு அஸ்திவாரத்தைக் கொடுத்திருக்கிறார்கள். அதன் மேல் நம் இஷ்டத்துக்கு ஒரு கட்டடத்தைக் கட்டுகிறோம் என்று பாலமுரளி ஒரு முறை கூறினார்.
  பழைய காலத்தைப் போல கர்நாடக இசை இல்லை என்ற குற்றச்சாட்டுக்கு அவருடைய பதில்: ""முன்காலத்தில் இசை இருந்ததைப் போலவே இப்போதும் எப்படி இருக்கும்? நம் தாத்தாவைப் போலவா நாம் இருக்கிறோம்? மாற்றம் என்பது இம்ப்ரூவ்மென்ட் - நம்மைத் திருத்திக் கொண்டு மேம்படுத்திக் கொள்வது. தியாகராஜ ஸ்வாமிகள் காலத்தில் பத்திரிகை, ரேடியோ, டிவி, ரெக்கார்டிங் எதுவும் கிடையாது. அவர் இப்படித்தான் பாடினார் என்று உறுதியாகச் சொல்ல முடியுமா? அவர் எப்படிப் பாடினார் என்று யாருக்கும் தெரியாதே''
  என்று அவர் கூறினார்.
  புகழுக்கு மயங்காதவர்: ஆனால், அந்தக் குறை தற்கால கர்நாடக சங்கீதத்துக்கும் வந்து விடக் கூடாதே என்ற ஆதங்கம் எங்காவது ஒட்டிக் கொண்டிருக்கும் போலிருக்கிறது. தென்னாட்டில் அகில இந்திய வானொலியில் பாலமுரளிகிருஷ்ணாதான் முதல் இசைத் துறை தயாரிப்பாளர். அந்த காலகட்டத்தில்தான் வானொலியில் கர்நாடக இசை நிகழ்ச்சிகளுக்கு ஒரு கட்டமைப்பை அவர் ஏற்படுத்தினார். மகா இசைக் கலைஞர் நீங்கள் என்று சர்க்கரையாகப் பாராட்டினால் சுலபமாக அதை ஏற்றுக் கொண்டுவிட மாட்டார். பாடுவது பாலமுரளிகிருஷ்ணா அல்ல. பாட்டு என் மூலம் வருகிறது. நாதத்துக்கு நான் ஒரு கருவி, அவ்வளவுதான் என்று பவ்யமாகக் கூறுவார்.
    வீணையில் பாட்டு இருக்கிறதா? வயலினில் பாட்டு இருக்கிறதா? அந்த இசைக் கருவிகளை எடுத்து வாசிப்பவர் அதில் நாதத்தை உருவாக்குகிறார். அது போலத்தான் ஏதோ ஒரு சக்தி என் வழியாக நாதத்தை உண்டாக்குகிறது. அதனால்தான் சொல்கிறேன் - பாடுவது நான் அல்ல என்று  பதில் சொல்லி ஒதுங்கிவிடுவார்.
    மிக நுட்பமான வேதாந்த தத்துவத்தை மிகத் தெளிவாக, எளிமையான வார்த்தைகளில் கொண்டு வந்துவிட்டவர் அவர். வாய்ப்பாட்டு மட்டுமல்லாமல், வயலின், வயோலா, மிருதங்கம், கஞ்சிரா வாசிக்க அவராகவே கற்றுக் கொண்டார். அவற்றைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்தது எதேச்சையாகத்தான். வீட்டில் ஒரு மிருதங்கம் இருந்தது. அதை எடுத்து தட்டித் தட்டி, கொஞ்சம் கொஞ்சமாக வாசிக்கப் பழகிக் கொண்டார். பின்னால் அதில் ஓரளவுக்குத் தேர்ச்சி அடைந்துவிட்டார். முதலில் அதெல்லாம் விளையாட்டாகத்தான் இருந்தது. 
     இசை அறிவு என்றால் வாய்ப்பாட்டு மட்டும் போதாது, பிற்காலத்தில் ஏதாவது ஒரு காரணத்தால் பாடாமல் போய்விடும் நிலை வந்தால், வேறு ஏதேனும் வாத்தியமும் வாசிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை அவரது வாத்தியக் கருவிகளைப் பழகும் இசைப் பயிற்சியில் ஒரு தீவிரத்தைக் கொடுத்தது.
  அதிர்ச்சியளிக்கும் முடிவு: அவருடைய அற்புதமான குரலைப் பாதுகாக்க எந்த தனிக் கவனத்தையும் அவர் செலுத்தியது கிடையாது என்று சொன்னால் அனைவருக்கும் அதிசயமாக இருக்கும். குரல் உள்ள வரை பாடுவேன். இல்லாவிட்டால் பாட மாட்டேன் என்று கூறியவர் அவர்!
    ஆனால், குரல் போகும் வரை அவர் காத்திருக்கவில்லை என்பதுதான் உண்மை. இனி பாடப் போவதில்லை என்று விண்ணிலிருந்து இடி இறங்கியதைப் போன்ற அறிவிப்பை அவர் வெளியிட்டார். சங்கீத சீசன்களில் அவர் நட்சத்திரப் பாடகராக கோலோச்சியபோது அந்த அறிவிப்பை வெளியிட்டார் என்றாலும், அவ்வப்போது, சில சிறப்பு மேடைகளில் அவருடைய இசை ஒலித்துக் கொண்டுதான் இருந்தது.
    புதிய தலைமுறையையும் புதுமையையும் கண்டு மிரளாத விவேகியாக அவர் இருந்தார் என்று சொல்லலாம். தினமும் நமக்கு வயது கூடுகிறது. நாம் மாறிக் கொண்டே வருகிறோம். மாறித்தான் ஆக வேண்டும். நான் பாடும்போது நான்கு தலைமுறையினருக்குப் பாடுகிறேன் என்ற உணர்வோடு பாடுகிறேன். நான்கு தலைமுறையினருக்கும் திருப்தி ஏற்படும்படி பாடிக் கொண்டிருக்கிறேன். நான் வளரவில்லையென்றால் என்னால் பாட முடியாது.
  தானாக உருவான ராகங்கள்: புதிய ராகங்களையும் புதிய தாளங்களையும் உருவாக்கியபோதிலும் அவை பற்றி யாராவது கேட்டால், அதை நானாக உருவாக்கவில்லை: தானாக உருவானது என்று அடக்கமாக கூறி வந்தார். என் குழந்தைப் பருவம் மற்ற குழந்தைகள் போலக் கிடையாது. எனக்குப் பல விளையாட்டுகள் தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம் சங்கீதம்தான். சங்கீதம் தவிர வேறு எந்த அனுபவமும் கிடையாது. எனக்கு வேறு ஒரு வேலையும் தெரியாது என்பார் அவர். அந்த சங்கீதப் பெருங்கடல் இப்போது அடங்கிவிட்டது.
  - டி.எஸ்.ரமேஷ்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai