Enable Javscript for better performance
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் விபத்துப் பாதுகாப்புக் குழு தேவை!- Dinamani

சுடச்சுட

  

  அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் விபத்துப் பாதுகாப்புக் குழு தேவை!

  By -ஆர். மோகன்ராம்  |   Published on : 28th November 2016 01:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  bus-stand

  அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தங்களின் பணிப் பாதுகாப்பு, எதிர்காலம் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு விபத்துப் பாதுகாப்புக் குழுவை அமைக்க வேண்டுமென அதன் ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
  தமிழகத்தில் கடந்த 1972-இல் தொடங்கப்பட்ட அரசுப் போக்குவரத்துக் கழகம் தற்போது நாட்டின் மிகப் பெரிய போக்குவரத்துக் கழகம் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது. இதன்மூலம் இயக்கப்படும் ஏறத்தாழ 20 ஆயிரம் பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துநர் உள்பட 1.36 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
  தற்போது, பெருகி வரும் விபத்துகளைக் குறைக்கவும், போக்குவரத்துக் கழக ஓட்டுநர்களைப் பாதுகாக்கும் வகையிலும் சட்டம் படித்த ஒரு மேலாளர், ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி ஆசிரியர், புகைப்படக்காரர் ஆகியோரைக் கொண்ட விபத்து பாதுகாப்புக் குழுவை அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் ஒவ்வொரு மண்டலத்திலும் அமைக்க வேண்டுமென போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் அரசை வலியுறுத்தி வருகின்றன.
  தற்போது, விபத்து நடந்தவுடன் அங்கு சென்று கிளை மேலாளர் (இயக்கம்), ஓட்டுநர் ஆய்வாளர் ஆகியோர் கள விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்யக்கூடிய வழக்கமும், போக்குவரத்துக் கழக அதிகாரிகள் ஒவ்வொரு மாதமும் கிளைகளுக்கு நேரில் சென்று ஓட்டுநர்களிடம் கலந்தாய்வு செய்யும் நடைமுறையும் உள்ளன. விபத்துப் பாதுகாப்புக் குழு என்ற தனி அமைப்பு எதுவும் இல்லை என போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
  இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக ஏஐடியுசி தொழிற்சங்கப் பொதுச் செயலர் பி. சக்திவேல் கூறியதாவது:
  கடந்த 2015, டிசம்பர் மாதம் நடைபெற்ற 12-ஆவது ஊதியக் குழு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையின் போது, விபத்தைக் குறைக்கும் நோக்கில் விபத்துப் பாதுகாப்புக் குழு அமைக்க வேண்டுமென நாங்கள் வலியுறுத்தினோம். இந்தக் குழு அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்டால், விபத்து நேரிட்ட இடத்துக்கு விரைவாகச் சென்று ஆய்வு செய்து, யார் மீது தவறு என்பதைச் சரியாகக் கணித்து, தவறு செய்யாத ஓட்டுநர்களைப் பாதுகாக்கும் வாய்ப்பு ஏற்படும். ஏனெனில், தற்போது நடைபெறும் ஆய்வறிக்கைகள் பெரும்பாலும் ஓட்டுநர்களைப் பாதிக்கும் வகையில்தான் அமைகின்றன.
  மேலும், பாதிக்கப்பட்டவரின் குடும்பச் சூழ்நிலை, இழப்பீடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே இந்த நடைமுறை கட்டமைக்கப்படுவதால், தவறு செய்யாத ஓட்டுநர்கள் குற்றவாளிகளாகும் நிலை உள்ளது. மேலும், விபத்து நடைபெறக்கூடிய இடங்களைக் கண்டறிந்து அங்கு விபத்துகள் நேரிடாமல் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் இந்தக் குழுவால் எடுக்க முடியும். மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் பெரும்பாலும் தற்போதுள்ள ஆய்வுக் குழுவின் அறிக்கையின் அடிப்படையிலேயே நீதிமன்றங்களில் தொகை நிர்ணயிக்கப்படுகிறது. இந்தத் தொகையை வழங்குவதில் நீடிக்கும் தாமதத்தால், பேருந்துகளை ஜப்தி செய்வதும் தொடர்கதையாக உள்ளது. எனவே, கேரள மாநிலத்தில் உள்ளதைப் போல அரசுப் பேருந்துகளுக்கு காப்பீடு வசதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 15 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட அரசுகளால் கண்டுகொள்ளப்படவில்லை என்றார் அவர்.
  இதுகுறித்து சிஐடியு தொழிற்சங்க நிர்வாகி கே. செல்வராஜ் கூறியதாவது:
  ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதம் நடத்தப்படும் சாலைப் பாதுகாப்பு வார விழாவின் போது, போக்குவரத்துக் கழகத்துடன் இணைந்து விழிப்புணர்வுப் பேரணி, ரத்த தானம், கண் பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுகின்றன.
  கும்பகோணம் கோட்ட அளவில் உள்ள சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுக் குழுவினர் ஒவ்வொரு மண்டலத்துக்கும் வந்து பிரசாரம் மேற்கொள்வதோடு சரி. மண்டலத்துக்கென தனியான விபத்து பாதுகாப்புக் குழு அமைப்பு எதுவும் இல்லை. எனவே, ஒவ்வொரு மண்டலத்திலும் விபத்துப் பாதுகாப்புக் குழு அமைப்பதே போக்குவரத்துக் கழக ஓட்டுநர்களின் பணிக்கும், எதிர்காலத்துக்கும் பாதுகாப்பாக அமையும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai