Enable Javscript for better performance
திருத்தணி சர்க்கரை ஆலையில் அரைவைத் தொடங்க தாமதம்: வெயிலில் காயும் கரும்புகள்; வேதனையில் விவசாயிகள்- Dinamani

சுடச்சுட

    

    திருத்தணி சர்க்கரை ஆலையில் அரைவைத் தொடங்க தாமதம்: வெயிலில் காயும் கரும்புகள்; வேதனையில் விவசாயிகள்

    By DIN  |   Published on : 28th November 2016 02:30 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sugarcanea

    பள்ளிப்பட்டு ஒன்றியம், நொச்சிலி கிராமத்தில் ஆலைக்கு அனுப்புவதற்காக வெட்டப்பட்டு சாலையோரம் வெயிலில் காயும் கரும்புகள்.

     

    திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பாண்டுக்கான கரும்பு அரைவையை அடுத்த மாதத்துக்கு திடீரென தள்ளிப் போட்டது. இதனால், ஏற்கெனவே வெட்டப்பட்டுள்ள கரும்புகள் வெயிலில் காய்ந்து வீணாவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
    திருவாலங்காட்டில், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலைக்கு, திருத்தணி, ஆர்.கே.பேட்டை, அத்திமாஞ்சேரி பேட்டை, சாலை, அரக்கோணம் மற்றும் கனகம்மாசத்திரம் ஆகிய பகுதிகளில் இருந்து 13,500 விவசாயிகள் கரும்பு பயிரிட்டு ஆண்டுதோறும், அனுப்பி வைக்கின்றனர்.
    ஆனால், ஆலைக்கு அனுப்பப்பட்ட கரும்புக்கான தொகையை முறையாக வழங்காமல், ஆலை நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது, இரு ஆண்டுகளுக்கான நிலுவைத் தொகை 32 கோடி ரூபாயை இதுவரை தரவில்லை என கரும்பு விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
    இந்நிலையில் நவம்பர் 28-ஆம் தேதி இந்த சர்க்கரை ஆலையில் அரைவை தொடங்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி அறிவித்தார். இதையடுத்து கரும்புக்கான வெட்டு உத்தரவை ஆலை நிர்வாகம் 19-ஆம் தேதி அனுப்பியது. 26-ஆம் தேதி முதல் கரும்பை அனுப்பி வைக்க ஆலை நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் வெளி மாவட்டங்களிலிருந்து தொழிலாளர்களை அழைத்து வந்து கடந்த சில நாள்களாக கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    கரும்பை வெட்டி ஆலைக்கு அனுப்ப தயாராக இருந்த நிலையில் திடீரென்று ஆலை நிர்வாகம் ஆலையில் அரைவை அடுத்த மாதம் (டிசம்பர்) தொடங்கப்படும் எனவும் அதுவரை கரும்பை வெட்ட வேண்டாம் என்றும் தகவல் தெரிவித்துள்ளது.
    ஏற்கெனவே அளித்த வெட்டு உத்தரவின்பேரில் வெட்டிய கரும்புகள் சாலையில் வெயிலில் காய்ந்து வருவதால் திருத்தணி, பள்ளிப்பட்டு வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
    கடந்த மாதமே அறுவடைக்குத் தயாராக இருந்த கரும்பு ஒரு மாதம் கால தாமதமாக ஆலையின் அனுமதி பெற்று வெட்டப்பட்ட நிலையில், மேலும் சில நாள்கள் அரைவை தொடங்கப்படாது என தள்ளி வைத்துள்ள திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக அறிவிப்பால் கரும்பு எடை குறைந்து விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
    இதுகுறித்து, நொச்சிலி கிராம விவசாயி பாபுராஜ் கூறியதாவது:
    எங்கள் பகுதி கரும்புகள் அனைத்தும் திருவாலங்காடு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்புகிறோம். ஆனால், ஏற்கெனவே வழங்கிய கரும்புக்கான தொகையை கொடுக்காமல் ஆலை நிர்வாகம் கடந்த 2 ஆண்டுகளாகவே இழுத்தடித்து வருகின்றது. நிலுவைத் தொகை, 32 கோடி ரூபாயை கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் உடனடியாக வழங்க வேண்டும்.
    தனியார் ஆலைகளில், விவசாயிகளுக்கு முன்பணம் கொடுத்தும், கரும்பு அனுப்பிய ஒரு வாரத்தில், அதற்கான தொகையும் வழங்கப்படுகிறது. ஆலை நிர்வாகத்தின் மெத்தன போக்கால் கரும்பு அறுவடை உள்ளிட்ட செலவினங்களுக்கு வாங்கிய கடனுக்கு,வட்டியை கூட கட்ட முடியாமல் கடந்த சில மாதங்களாகவே அவதிப்பட்டு வருகிறோம்.
    மத்திய சுற்றுச் சூழல் அமைப்பிடமிருந்து சான்று பெறுவதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தால் தான் அரைவை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது என்றார்.
    தமிழக அரசு இதில் தலையிட்டு திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரைவையைத் தொடங்க நடவடிக்கை எடுப்பதுடன், கரும்பு நிலுவைத் தொகையினை வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai