Enable Javscript for better performance
ஏ.டி.எம். பணம் ரூ.1.18 கோடி கொள்ளை வழக்கில் வேன் ஓட்டுநரின் உறவினர்கள் இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    ஏ.டி.எம். பணம் ரூ.1.18 கோடி கொள்ளை வழக்கில் வேன் ஓட்டுநரின் உறவினர்கள் இருவர் கைது

    By DIN  |   Published on : 08th October 2016 02:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவேற்காடு அருகே ஏ.டி.எம். பணம் ரூ. 1.18 கோடி கொள்ளைபோன வழக்கு தொடர்பாக வேன் ஓட்டுநரின் உறவினர்கள் இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். மணலில் புதைத்து வைத்திருந்த ரூ. 72 லட்சத்தையும் மீட்டனர்.
    சென்னை திருவேற்காடு அருகே வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் கடந்த திங்கள்கிழமை பணம் நிரப்புவதற்காக வேனில் சென்றனர். அப்போது, வேன் ஓட்டுநரான சாத்தான்குளம் அருகேயுள்ள அரசூர் தொட்டிக்காரன்விளையைச் சேர்ந்த இசக்கிப்பாண்டி (33), வேனில் பெட்டி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த ரூ.1.18 கோடி மற்றும் வேனுடன் மாயமானார்.
    இதுதொடர்பாக போலீஸார் தனிப்படை அமைத்து இசக்கிப்பாண்டியை தேடி வந்த நிலையில், அவர், ஸ்ரீவைகுண்டம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தார். அவரை அக்டோபர் 13-ஆம் தேதி வரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கவும், 14-ஆம் தேதி பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதித்துறை நடுவர் முருகன் உத்தரவிட்டார். இதனிடையே, பணம் கொள்ளைபோன சம்பவத்துக்குப் பிறகு இசக்கிப்பாண்டி, நாசரேத் அருகே வைத்தியலிங்கபுரத்தில் உள்ள தன் தங்கை வடிவு வீட்டுக்கு வந்து சென்றதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், தூத்துக்குடி தனிப்படை போலீஸார் வெள்ளிக்கிழமை வடிவு வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தினர். மேலும், சந்தேகத்தின்பேரில் வடிவுவின் கணவர் ம.கனகராஜ் (32), அவரது சகோதரர் ம.ஜவகர் (34) ஆகியோரை அழைத்துச் சென்று, சாத்தான்குளம் டி.எஸ்.பி. அலுவலகத்தில் வைத்து விசாரித்தனர். அதில், இசக்கிப்பாண்டி தந்ததாக ரூ. 72 லட்சத்தை அங்குள்ள தேரி மணலில் புதைத்து வைத்ததாக இருவரும் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் போலீஸார் அங்கு சென்று பணத்தை மீட்டனர். இதையடுத்து அண்ணன், தம்பி இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், வடிவு தலைமறைவானதைத் தொடர்ந்து அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai