Enable Javscript for better performance
காவிரி பிரச்னைக்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த திமுக தயார்: மு.க. ஸ்டாலின்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி பிரச்னைக்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த திமுக தயார்: மு.க. ஸ்டாலின்

    By DIN  |   Published on : 08th October 2016 03:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    stalin-meet

    உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசிய திமுக பொருளாளரும், சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின்.

    காவிரி பிரச்னைக்காக அனைத்து கட்சிக் கூட்டத்தை நடத்தி, பிரதமரை சந்திக்கத் தயாராக இருக்கிறோம் என்றார் திமுக பொருளாளரும், சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின்.
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக விவசாயிகளுக்குத் துரோகம் செய்யும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து, தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன் தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்ட திமுக சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்குத் தலைமை வகித்த அவர் மாலையில் போராட்டத்தை முடித்து வைத்துப் பேசியதாவது:
    காவிரி பிரச்னை பெரிதாக வளர்ந்திருப்பதற்கு மத்தியில் ஆளும் மோடி அரசும், மாநிலத்தில் உள்ள அதிமுக அரசுமே காரணம். காவிரி பிரச்னையில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. அதிமுக அரசு நம் உரிமையை அடமானம் வைக்கிறது.
    தமிழகத்துக்குத் தண்ணீர் தருமாறு உச்ச நீதிமன்றம் 6 முறை உத்தரவு பிறப்பித்தது. அதில், முதல் 2 உத்தரவுகளை மட்டுமே கர்நாடகம் நிறைவேற்றியது.
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கச் சொல்வதற்கு உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. மத்திய அரசின் இக்கொடிய வாதம் தமிழர்களின் உரிமையைப் பறிக்கும் வாதம். காவிரி மேலாண்மை வாரியம் கட்டாயம் அமைக்க வேண்டும் என காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக மக்களையும், விவசாயிகளையும் மத்திய அரசுப் புறக்கணித்து துரோகம் செய்கிறது. இதை தமிழக விவசாயிகள் ஏற்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள்.
    இந்தப் போராட்டத்தில் பேசிய விவசாய சங்கத் தலைவர்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர் நடத்துமாறு வலியுறுத்தினர். இதுதொடர்பாக கருணாநிதியிடம் பேசி, அவரது அனுமதி பெற்று விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும். அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நாங்கள் நடத்துவதைவிட, ஆளுங்கட்சி நடத்தினால்தான் சரியாக இருக்கும். ஓரிரு நாளில் அனைத்து கட்சிக் கூட்டத்தை ஆளுங்கட்சி நடத்தினால், அதில் திமுக பங்கேற்கும். காலம் கடத்தினால் திமுக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தும். ஒத்தக் கருத்துடைய கட்சிகளை அழைத்து பேசி பிரதமரை சந்திப்போம். தேவைப்பட்டால் குடியரசுத் தலைவரையும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம் என்றார் ஸ்டாலின்.
    திமுக தலைமைக் கழக முதன்மைச் செயலரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன், விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் தலைவர் பி.கே. தெய்வசிகாமணி, சட்டப் பேரவை உறுப்பினர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    "தாற்காலிக முதல்வரை நியமிக்க வேண்டும்'

    போராட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் தெரிவித்ததாவது:
    தமிழக முதல்வரின் உடல்நிலையை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை. முதல்வரின் உடல்நலம் குறித்து பல்வேறு தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. அவரது உடல்நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையைப் பார்க்கும்போது அவருக்குப் பெரிய அளவில் பாதிப்பு இருப்பதாக அச்சப்படுகிறோம்.
    திமுக தலைவர் கருணாநிதி சொல்வதுபோல, தமிழக முதல்வர் பூரண நலம் பெற்று திரும்ப வேண்டும் என்பதே எங்களது விருப்பம். அதுவரை தாற்காலிக முதல்வரையோ அல்லது துணை முதல்வரையோ அல்லது அடுத்த நிலையில் உள்ள மூத்த அமைச்சரையோ நியமித்து காவிரி பிரச்னை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றார் ஸ்டாலின்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai