Enable Javscript for better performance
பரிசு மோசடி: இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கரூரில் பிரபல தங்கும் விடுதி உரிமையாளரிடம் ஆடி சொகுசு ரக கார் பரிசு விழுந்திருப்பதாகக் கூறி, ரூ. 65,000 மோசடி செய்த சென்னை இளைஞரைப் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
    கரூரில் கோவை சாலையில் தனியார் சொகுசு தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் உரிமையாளருக்கு கடந்த மே மாதம் 25-ஆம் தேதி ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் மறுமுனையில் பேசியவர், ஆடி சொகுசு ரக கார் நிறுவன மேலாளர், சென்னையில் இருந்து பேசுவதாக அறிமுகம் செய்து கொண்டுள்ளார். தமிழகத்தில் உள்ள பிரபல ஓட்டல்கள், லாட்ஜுகள் ஆகியவைகளில் குலுக்கல் முறையில் ஆடி சொகுசு ரக கார் பரிசுக்கு தங்கள் தங்கும் விடுதி தேர்வு ஆகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் ஆடி சொகுசு ரக கார் பரிசு வழங்க காருக்கான வரி ரூ. 65,000-ஐ உடனே தனியார் வங்கியில் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.
    இதையடுத்து விடுதி உரிமையாளர் வங்கியில் மறுநாள் பணத்தைச் செலுத்தியுள்ளார். இதையடுத்து சம்பந்தப்பட்ட கார் நிறுவன மேலாளரைத் தொடர்பு கொண்ட போது, அவரது செல்லிடப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் ஏமாற்றமடைந்த விடுதி உரிமையாளர், கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
    புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து மோசடியில் ஈடுபட்டவரைத் தேடி வந்தனர். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மோசடியில் ஈடுபட்ட சென்னை தண்டையார்பேட்டை அன்னை சந்தியா நகரைச் சேர்ந்த முகமது ரபீக் (45) என்பவரைக் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் முகமது ரபீக் மீது கோவை சிங்காநல்லூர், மதுரை மேலூர், நாகை வேளாங்கண்ணி ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai