Enable Javscript for better performance
மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

    By DIN  |   Published on : 08th October 2016 05:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    water_life

    நீர் நிரம்பி விசாலமாக காட்சியளிக்கும் மதுராந்தகம் ஏரி. (உள்படம்) நீரின் அளவைக் காட்டும் அளவுகோல்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியாக திகழும் மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    மழைக்காலத்தில் மதுராந்தகம் ஏரியைப் பார்க்கும்போது, அகன்று விரிந்த குட்டிக்கடல் போன்று காட்சி அளிக்கும். இதன் நீர்மட்டக் கொள்ளளவு 21.5 அடியாகும். தற்போது 17.8 அடி நீர் உள்ளது.
    பொதுவாக வடகிழக்குப் பருவ மழைக்காலமான ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் இந்த ஏரி நிரம்பி வழியும்.
    ஏரியின் நீர்பாசனக் கால்வாய் மூலம் மதுராந்தகம், முள்ளி, முன்னூத்திக்குப்பம், கிணார், கத்திரிச்சேரி, வளர்பிறை, கடப்பேரி உள்ளிட்ட 20 கிராமங்களுக்கு உள்பட்ட சுமார் 2,413 ஏக்கர் நிலங்கள் நேரிடையான பாசன வசதியைப் பெறுகிறது.
    உத்தரமேரூர், வேடந்தாங்கல் ஏரிகள் மழைக்காலத்தில் பெருகும் வெள்ளநீரினால் நிரம்பி வழியும். அப்போது, திறக்கப்படும் உபரி நீர் கால்வாய் வழியாக மதுராந்தகம் ஏரியை வந்தடைகிறது. மதுராந்தகம் ஏரியில் நீர் நிரம்பினால், கல்லாற்றின் வழியாக உபரிநீர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    ஏரியில் உள்ள 84 லாக்குகள் மூலம் உபரிநீரை கால்வாய்களுக்கு எளிதில் வெளியேற்ற முடியும். இங்கு திறந்து விடப்படும் நீரானது அருங்குணம், காவாதூர், வீராணகுணம், சீவாடி, நீலமங்கலம், நெசப்பாக்கம் ஏரிகளுக்கு செல்லும். மேற்கண்ட ஏரிகள் உள்பட 30 ஏரிகளின் வழியாக மேலும், 4, 746.93 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு காவிரி ஆற்று நீர் உதவுவது போல, இப்பகுதி விவசாயிகள் மதுராந்தகம் ஏரி நீரைக் கொண்டு, மூன்று போகம் பயிர்கள் விளைவித்து வந்தனர்.
    எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக இருந்தபோது, இங்கு ரூ.5 கோடி மதிப்பீட்டில் உயர்மட்டக் கால்வாய் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த டிசம்பர் மாதம் பெய்த பெருமழையின்போது சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஏரிகளின் உபரி நீர்வரத்து அதிகரிப்பால், சுமார் 40 அடி வரை வெள்ளநீரை மதுராந்தகம் கலங்கல் கிளியாற்று வழியாக எடுத்துச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன் வரை ஏரியின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வந்தது. இதனால், மதுராந்தகம் ஏரி நீரை நம்பி இருந்த விவசாயிகள் பெரிதும் கவலைக்குள்ளாகி இருந்தனர்.
    இந்நிலையில், கடந்த சில நாள்களாக பெய்த பலத்த மழையால், ஏரிக்கு நீர் வரத் தொடங்கியது. தற்போது தொடர்ந்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
    வெள்ளிக்கிழமை நிலவரப்படி ஏரியில் 17.8 அடி நீர் உள்ளது. வடகிழக்குப் பருவமழை காலம் தொடங்கியுள்ள நிலையில், மதுராந்தகம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரிக்கரையின் ஓரங்களில் இருந்த முள்புதர்களை அகற்றியும், ஏரியின் மதகுகள், நீர் செல்லும் பகுதிகளில் உள்ள கதவணைகள் போன்றவற்றை சுமார் ரூ. 7 லட்சம் மதிப்பில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டனர்.
    இவற்றுடன், ஏரியில் தூர்வாரும் பணியையும் மேற்கொண்டால் மேலும், அதிகப்படியான நீரைத் தேக்கி வைக்கமுடியும். இப்பணியை விரைந்து செய்யவேண்டும் என மதுராந்தகம் சுற்றுவட்டாரப் பகுதி மக்களும், விவசாயிகளும் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai