Enable Javscript for better performance
மருத்துவமனையில் ஜெயலலிதா:ராகுல் கொடுத்த அதிர்ச்சி!- Dinamani

சுடச்சுட

    
    rahul_(2)

    அதிமுக பக்கம் நெருங்குவது போன்ற தோற்றத்தை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஏற்படுத்தியுள்ளதால், திமுக தலைவர் கருணாநிதி உள்பட அந்தக் கட்சியினர் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
    திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினின் அணுகுமுறை குறித்து தாங்கள் புகார் தெரிவித்ததாகவும், அதன் அடிப்படையிலேயே ராகுல் இந்த நகர்வை மேற்கொண்டதாகவும் தமிழக காங்கிரஸார் கூறுகின்றனர்.
    முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் தொடர்பாக விசாரிப்பதற்காக தில்லியிலிருந்து சென்னைக்கு ராகுல் காந்தி நேரில் வந்தது என்பது ஆரோக்கியமான அரசியலாகும். ஆனால், அந்த அரசியலுக்குப் பின்னாலும் இருக்கிறது ஆயிரம் அரசியல்.
    இன்னும் சில நாள்களில் முதல்வரின் நலம் விசாரிப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடியும் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வர உள்ளார். தமிழக அரசியலில் ராகுல் மேற்கொண்டுள்ள நகர்வை, மோடி எப்படித் தகர்க்கப் போகிறார் எனத் தெரியவில்லை.
    ஆனால், முதல்வரை நலம் விசாரித்ததன் மூலம் திமுகவுக்கும், அதன் தலைவர் கருணாநிதிக்கும் ராகுல் கொடுத்த அதிர்ச்சி கொஞ்சமல்ல. இதைத் தி.மு.க.வில் யாருமே எதிர்பார்க்கவில்லை.
    கருணாநிதியின் எதிர்பார்ப்பு: கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்துக்கு ராகுல் காந்தி பல முறை வந்திருந்தாலும், இதுவரை கருணாநிதியை நேரில் சந்தித்தது இல்லை. கூட்டணி, அரசியல் விவகாரங்களுக்காக பிரணாப் முகர்ஜி, மன்மோகன் சிங், சோனியா காந்தி, குலாம்நபி ஆசாத் போன்றோரே கருணாநிதியைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.
    கடந்த முறை சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி அமைந்த போதாவது ராகுல் வந்து சந்திப்பார் என்று கருணாநிதி எதிர்பார்த்தார். தேர்தல் பிரசாரத்தின் போது கருணாநிதி- ராகுல் பங்கேற்கும் பொதுக்கூட்டம் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால், அப்படியொரு கூட்டமே நடைபெறவில்லை.
    சோனியா காந்தியும்- கருணாநிதியும் பேசிய பொதுக்கூட்டம் மட்டுமே சென்னை தீவுத் திடலில் நடைபெற்றது. மேலும், உடல் நலம், பாதுகாப்பு போன்ற காரணங்களைக் கூறி, தமிழகத் தேர்தல் பிரசாரத்தையும் ராகுல் காந்தி ரத்து செய்தார்.
    தற்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடரும் நிலையிலும், முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து ராகுல் நேரில் வந்து விசாரித்துச் சென்றுள்ளார். மேலும், ஜெயலலிதாவுக்கு தன்னுடைய ஆதரவும், காங்கிரஸ் தலைவரின் ஆதரவும் உண்டு என்றும் ராகுல் கூறியுள்ளார். இந்த ஆதரவு முதல்வரின் உடல் நிலைக்கு மட்டுமானதா, அரசியலுக்குமா என்பது திமுகவின் கேள்வியாக மாறியுள்ளது.
    ஸ்டாலினின் அணுகுமுறை: சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 41 இடங்களை ஒதுக்கியதைப் பொருளாளர் மு.க. ஸ்டாலின் விரும்பவில்லை. அவர் எச்சரித்தது போலவே, காங்கிரஸூக்கு ஒதுக்கப்பட்ட 41 இடங்களில் வெறும் 8 இடங்களில் மட்டும்தான் அந்தக் கட்சி வெற்றி பெற முடிந்தது.
    அதிமுகவுடன் நேரடியாக மோதிய தொகுதிகள் பலவற்றிலும் திமுக வெற்றி பெற்றிருக்கும் நிலையில், மு.க. ஸ்டாலின் வற்புறுத்தியதுபோல காங்கிரஸூடன் கூட்டணி இல்லாமல் இருந்திருந்தால், திமுக மேலும் 20 அல்லது 30 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கும் என்று ஸ்டாலின் ஆதரவாளர்கள் கருதுகிறார்கள். அதனால்தான், உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸூக்கு 5 சதவீதத்துக்கும் குறைவான இடங்கள் மட்டுமே ஒதுக்க மு.க. ஸ்டாலின் முடிவெடுத்தார்.
    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையை எதிர்த்து ஜி.கே. வாசனால் தொடங்கப்பட்ட கட்சி தமாகா. அந்தக் கட்சியை திமுக கூட்டணிக்குள் அழைத்து வந்து காங்கிரûஸ வெளியேற்றும் முயற்சியில் ஸ்டாலின் ஈடுபட்டார். இந்த முயற்சி, காங்கிரஸ் தலைமை கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவும், கருணாநிதி எடுத்த கறார் நடவடிக்கையாலும் தடுக்கப்பட்டுவிட்டது.
    மேலும், உள்ளாட்சித் தேர்தலுக்கான ஸ்டாலினின் அணுகுமுறையால் காங்கிரஸார் மிகுந்த அதிருப்தியில் இருந்து வருகின்றனர். காங்கிரஸிலும் திமுகவின் ஆதரவாளர்கள் எனச் சிலர் உண்டு. அவர்களில் பீட்டர் அல்போன்ஸூம் ஒருவர். அவரே ஒரு வார்டு கேட்டு, அதுவும் ஸ்டாலினால் கொடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால், தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த காங்கிரஸ் தலைவர்களும் திமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்று ராகுல் காந்தியிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. காங்கிரசை ஓரங்கட்டும் திமுகவுக்குத் தக்க பதிலடி கொடுக்கும் வகையிலும், அதிமுகவின் பக்கமும் தங்களால் சாய முடியும் எனத் திமுகவுக்கு உணர்த்தும் வகையிலும் ராகுலின் இந்தப் பயணம் அமைந்ததாக காங்கிரஸார் தெரிவிக்கின்றனர்.
    இந்த நிலையில், தில்லியில் உள்ள அதிமுகவின் நலம் விரும்பிகள் சிலர் ராகுல் காந்தியைச் சந்தித்து, தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக எடுத்துக் கூறியுள்ளனர். இதற்கிடையில், 2ஜி அலைக்கற்றை வழக்கு தொடர்பான தீர்ப்பும் வர உள்ளது.
    இதையெல்லாம் கணக்கிட்டுத்தான் பாஜகவுக்கும், திமுகவுக்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இந்தப் பயணத்தை அவர் மேற்கொண்டதாக காங்கிரஸார் கூறுகின்றனர்.
    மெளன நிலையில் திமுக: தற்போது உடனடியாக காங்கிரஸூக்கு எதிராக எந்த முடிவையும் எடுக்க முடியாத நிலையில் திமுக இருந்து வருகிறது. திமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு தமிழகத்தில் வேறு எந்தக் கட்சியும் இதுவரை முன்வராத நிலையில், மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸூடனே கூட்டணி அமைக்க வேண்டும் என்பதே அந்தக் கட்சியின் நிலைப்பாடாக இருக்கிறது. அதனால், காங்கிரஸ் விவகாரத்தில் சிறிது காலத்துக்கு மெளனம் காப்போம் என்ற முடிவுக்கு திமுக தலைமை வந்துள்ளது என்று கூறப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai