Enable Javscript for better performance
முதல்வர் உடல்நலம்: ராகுல் விசாரித்தார்- Dinamani

சுடச்சுட

    
    ragul

    முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் விசாரித்துவிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்.

    அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முதல்வர் ஜெயலலிதாவிடம் உடல்நலன் குறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்தார்.
    தில்லியில் இருந்து தனி விமானத்தில் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ராகுல் வந்ததால், சென்னை விமான நிலையத்துக்கு காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் யாரும் வரவேற்கச் செல்லவில்லை. ராகுல் வருவதற்கு குறித்து தகவலறிந்தவுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர், சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார்.
    விமான நிலையத்தில் இருந்து மருத்துவமனைக்கு காரில் காலை 11.50 மணிக்கு வந்த ராகுலை, அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி மற்றும் பலர் வரவேற்றனர். இதையடுத்து, முதல்வர் சிகிச்சை பெறும் 2-ஆவது மாடிக்குச் சென்ற ராகுல், மருத்துவ நிபுணர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். மேலும், அங்கிருந்த அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகளிடம் முதல்வர் உடல்நலம் பெற வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு சுமார் 30 நிமிஷங்கள் பின்னர், ராகுல் புறப்பட்டார். அப்பல்லோ மருத்துவமனையில் புறப்பட்டு, சென்னை விமான நிலையம் சென்றடைந்தார்.
    முன்னதாக, மருத்துவமனைக்கு வெளியே அவர் அளித்த பேட்டி: முதல்வர் ஜெயலலிதாவுக்கு எனது ஆதரவையும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் ஆதரவையும் தெரிவிக்கவே தில்லியில் இருந்து வந்தேன். முதல்வரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் விரைவில் பூரண குணமடைவார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் விரைவில் பூரண குணமடைய முழு சக்தியையும் அளிக்க விரும்புகிறேன் என்றார்.
    திடீர் பாதுகாப்பு: கடைசி நேரத்தில் ராகுல் வருகை தெரிவிக்கப்பட்டதால், சென்னை விமான நிலையத்தில் இருந்து அண்ணா சாலை வரை அவசர, அவசரமாக காவல் துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர். மருத்துவமனை பகுதியில் தடுப்புகளை அமைத்து, பொதுமக்கள் செல்லும் பாதைகள் மாற்றியமைக்கப்பட்டன. இதனால் அவர் மருத்துவமனைக்கு வந்து செல்லும் வரை க்ரீம்ஸ் சாலை பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai