Enable Javscript for better performance
ரயில்வே அதிகாரியை மிரட்டியதாக 11 பணியாளர்கள் பணியிடை நீக்கம்- Dinamani

சுடச்சுட

    

    ரயில்வே அதிகாரியை மிரட்டியதாக 11 பணியாளர்கள் பணியிடை நீக்கம்

    By DIN  |   Published on : 08th October 2016 01:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்சியில் ரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளரை அலுவலகத்துக்குள் புகுந்து மிரட்டியதாக ரயில்வே பணியாளர்கள் 11 பேர் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
    திருச்சி கோட்ட முதுநிலை வணிக மேலாளராக பணியாற்றி வருபவர் அருள்தாமஸ் (35). இவர் கடந்த இரு தினங்களுக்கு முன் திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், ரயில்வேயில் பணியாற்றி வரும் பணியாளர்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் (எஸ்ஆர்எம்யு தொழிற்சங்க நிர்வாகிகள்) தனது அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து, தன்னை தரக்குறைவாக பேசியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறியிருந்தார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வந்தனர்.
    மேலும், இதுகுறித்து சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தெற்கு ரயில்வேயின் தலைமை வணிக மேலாளர், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ரயில்வே பணியாளர்கள் 11 பேரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து வெள்ளிக்கிழமை அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
    பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்கள் விவரம்: திருச்சி ஜங்ஷன் பார்சல் பிரிவு எழுத்தர் ஐசக் ஜான்சன், டிக்கெட் பரிசோதகர் தாமரைச்செல்வன், தலைமை டிக்கெட் பரிசோதகர் ஜெயச்சந்திரன், முதுநிலை பொறியாளர் ராவணதாஸ், எலக்ட்ரிக் டெக்னீஷியன் நாகராஜன், ரயில்வே மருத்துவமனை பணியாளர் சாந்தி தங்கம், முகமதுஷபி, கௌசிகன், ராஜா, சையதுதாஜுதீன் அஸ்லாம், மார்ட்டின்.
    இந்த 11 பேரின் பணியிடை நீக்கத்தை கண்டித்து திருச்சி ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai