Enable Javscript for better performance
இந்தியாவின் கலாசாரமும், பாரம்பரியமும் அழிக்க முடியாதவை: ஆளுநர் வித்யாசாகர் ராவ் பேச்சு- Dinamani

சுடச்சுட

    

    இந்தியாவின் கலாசாரமும், பாரம்பரியமும் அழிக்க முடியாதவை: ஆளுநர் வித்யாசாகர் ராவ் பேச்சு

    By DIN  |   Published on : 15th October 2016 10:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vidhyasagarrav

    ஸ்ரீவைஷ்ணவ சங்கோஷ்டி சார்பில் ஸ்ரீரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஸ்ரீ ராமானுஜரின் 1000-ஆவது ஜயந்தி விழாவில் பேசிய தமிழக ஆளுநர் (பொறுப்பு) சி.எச்.வித்யாசாகர் ராவ். உடன், திரிதண்டி சின்ன ஸ்ரீமந் நாரா

     

    இந்தியாவின் கலாசாரமும், பாரம்பரியமும் அழிக்க முடியாதவை என்றார் தமிழக ஆளுநர் (பொறுப்பு) சி.எச். வித்யாசாகர் ராவ்.
    ஸ்ரீ வைஷ்ணவ சங்கோஷ்டி சார்பில் நடத்தப்படும் ஸ்ரீ ராமானுஜரின் 1000-ஆவது ஜயந்தி விழா ஸ்ரீரங்கம் கீழ சித்திரை வீதியில் உள்ள கோரத மூலையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
    மூன்று நாள் மாநாடாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் முதல் நாளான வெள்ளிக்கிழமை காலை பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஸ்ரீ வைஷ்ணவ சங்கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்து, நான்கு உத்திர, சித்திரை வீதிகளில் வலம் வந்து விழா பந்தலை அடைந்தனர்.
    தொடர்ந்து ஸ்ரீஸ்ரீஸ்ரீ திரிதண்டி சின்ன ஸ்ரீமந் நாராயண ராமானுஜ ஜீயர் சுவாமிகள் குத்துவிளக்கேற்றினார். அவரை தொடர்ந்து ஆளுநர் வித்யாசாகர் ராவ், அவரது மனைவி வினோதா மற்றும் பிற ஊர்களிலிருந்து வந்திருந்த ஜீயர்கள் குத்துவிளக்கேற்றினர்.
    தொடர்ந்து ஆளுநர் வித்யாசாகர் பேசியதாவது:
    அனைத்து மதங்களும் சமத்துவத்தையும், சமதர்மத்தையும் போதித்து வந்தன. இந்தக் கருத்தை மக்களிடம் கொண்டு சென்றவர் ஸ்ரீ ராமானுஜர். அதனால்தான் ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் அவர் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.
    சர்வதேச அளவில் தீவிரவாதமும், பயங்கரவாதமும் அதிகரித்துள்ள நிலையிலும், நம் நாட்டில் மட்டும் அமைதி நிலவுகிறது. அதற்கு காரணம் நமது கலாசாரம். நமது கலாசாரமும், பாரம்பரியமும் அழிக்க முடியாதவை. அவை குறித்து நாம் பெருமை கொள்ள வேண்டும்.
    2020-ஆம் ஆண்டில் உலகில் இளைஞர்கள் அதிகம் உள்ள நாடாக இந்தியா இருக்கும். இந்த இளைஞர்களின் ஆற்றலை சரியான முறையில் பயன்படுத்தினால் இந்தியா வளமான நாடாக மாறும் என்பதில் ஐயமில்லை என்றார் ஆளுநர்.
    முன்னதாக, ஸ்ரீஸ்ரீஸ்ரீ திரிதண்டி சின்ன ஸ்ரீமந் ராமானுஜ ஜீயர் பேசும்போது, 2016-2017-ஆம் ஆண்டு ஸ்ரீ ராமனுஜரின் திருநட்சத்திர ஆண்டாகும். அவர் கூறிய கருத்துகளை அனைவரிடமும் கொண்டு சேர்ப்போம் என்றார்.
    விழாவில் ஸ்ரீரங்க நாராயண ஜீயர், வாணமாமலை ராமானுஜ ஜீயர், திருக்குறுங்குடி ராமானுஜ ஜீயர், ஆழ்வார் திருநகரி எம்பெருமானார் ஜீயர், ஸ்ரீ வில்லிபுத்தூர் சடகோபராமானுஜ ஜீயர், அயோத்திய ராமானுஜ ஜீயர், மன்னார்குடி சண்ட அலங்கார செண்பக ராமானுஜ ஜீயர், திருக்கோவிலூர் சீனிவாச ராமானுஜ ஜீயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜீயர் சுவாமிகளுக்கும், ஆசார்ய புருஷர்களுக்கும் மரியாதை செய்யப்பட்டது.
    சனிக்கிழமை காலையில் நடைபெறும் விழாவில் ஸ்ரீமந் ராமானுஜரின் திருமுடி சம்பந்த ஆசார்யார்களுக்கும், வித்வான்களுக்கும் மரியாதை செய்யப்படுகிறது.
    ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் ஜீயர்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சியும், ஸ்ரீஸ்ரீஸ்ரீ திரிதண்டி சின்ன ராமானுஜ ஜீயர் சுவாமிகளின் பேரூரையுடன் விழா நிறைவு பெறுகிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai