Enable Javscript for better performance
குட்டியைத் தேடி வந்த தாய் யானை சேற்றில் சிக்கி சாவு- Dinamani

சுடச்சுட

    
    elephant

    சேற்றில் சிக்கி உயிரிழந்த யானை.

    பவானிசாகர் வனச் சரகத்துக்கு உள்பட்ட பூதிக்குப்பை வனப் பகுதியில் மாயாற்றின் கரையோரம் குட்டியைத் தேடி வந்த தாய் யானை சேற்றில் சிக்கி சனிக்கிழமை உயிரிழந்தது.
    சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகரை அடுத்த பூதிக்குப்பை வனப் பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. வனத்தின் மத்தியில் மாயாறு செல்கிறது. இங்குள்ள யானைகள் கூட்டம் கூட்டமாகச் சென்று மாயாற்றில் தண்ணீர் குடித்துவிட்டுச் செல்வது வழக்கம்.
    இந்த நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பூதிக்குப்பை, மாயாற்றுப் படுகையில் தண்ணீர் குடிக்க வந்த குட்டி யானை நோயால் உயிரிழந்தது. இந்த நிலையில், அதே பகுதியில் ஒரு யானை சேற்றில் சிக்கி இறந்துகிடப்பதாக வனத் துறையினருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில், வனத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, குட்டியைத் தேடி வந்த தாய் யானை சேற்றில் சிக்கி உயிருக்குப் போராடி, பின்னர் மூச்சுத் திணறி உயிரிழந்திருப்பது தெரியவந்தது.
    இதையடுத்து சத்தியமங்கலம் புலிகள் காப்பக இணை இயக்குநர் அருண் முன்னிலையில் கால்நடை மருத்துவர் யானையின் உடலைப் பரிசோதனை செய்தார். கடந்த இரு நாள்களில் ஒரே இடத்தில் 2 யானைகள் உயிரிழந்த சம்பவம் வனத் துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai