Enable Javscript for better performance
தண்ணீர் லாரி மோதி 3 மாணவிகள் இறந்த சம்பவம் : தமிழக அரசுக்கு என்எச்ஆர்சி நோட்டீஸ்- Dinamani

சுடச்சுட

    

    தண்ணீர் லாரி மோதி 3 மாணவிகள் இறந்த சம்பவம் : தமிழக அரசுக்கு என்எச்ஆர்சி நோட்டீஸ்

    By DIN  |   Published on : 15th October 2016 01:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னையில் தண்ணீர் டேங்கர் லாரி மோதி மூன்று மாணவிகள் உயிரிழந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலர், காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆர்சி) உத்தரவிட்டுள்ளது.
    சென்னை கிண்டியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மூன்று மாணவிகள் வியாழக்கிழமை கல்லூரி முடிந்து சாலையைக் கடக்கும் போது தண்ணீர் டேங்கர் லாரி மோதியதில் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் எட்டு பேர் காயம் அடைந்தனர்.
    இது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் அசம்பவத்தை தாமாக முன்வந்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து தமிழக தலைமைச் செயலர், டிஜிபி ஆகியோர் நான்கு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஆணையம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    அதில் மேலும் கூறியிருப்பதாவது: சாலை விபத்தில் மூன்று மாணவிகள் உயிரிழந்த சம்பவம் மட்டுமின்றி இதுபோன்ற விபத்துகளில் தொடர்புடைய லாரி ஓட்டுநர்களின் உரிமத்தை ரத்து செய்வது உள்ளிட்ட சட்ட ரீதியிலான நடவடிக்கையை போக்குவரத்து, காவல், சென்னை குடிநீர் வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் சரிவர மேற்கொள்வதில்லை. அவற்றின் அலட்சியமான அணுகுமுறையால்தான் விபத்துகள் ஏற்படுகின்றன.
    எனவே, தமிழகத்தில் தண்ணீர் டேங்கர் லாரிகளின் தகுதி எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது? எவ்வளவு சேவையை நாள் ஒன்றுக்கு தண்ணீர் டேங்கர் லாரிகள் வழங்குகின்றன? கடந்த ஐந்து ஆண்டுகளில் தண்ணீர் டேங்கர் லாரிகளால் எத்தனை சாலை விபத்துகள் நடந்துள்ளன? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன எடுக்கப்பட்டுள்ளன? விபத்துக்குக் காரணமான லாரி ஓட்டுநர்கள் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? எதிர்காலத்தில் இத்தகைய விபத்துகளைத் தடுக்க என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? ஆகியவை குறித்து தலைமைச் செயலர், டிஜிபி ஆகியோர் விளக்க வேண்டும்.
    தகுதியற்ற மைனர் நபர்கள் குடிபோதையில் வாகனங்களை இயக்குவதால் அப்பாவிகள் பலியாகும் சம்பவங்கள் ஏற்படுகின்றன. குடிமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பில் இருந்து ஒரு மாநில அரசு தப்பித்துக் கொள்ள முடியாது என்று நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai