Enable Javscript for better performance
மோசடி வழக்கில் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை- Dinamani

சுடச்சுட

    

    மோசடி வழக்கில் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை

    By DIN  |   Published on : 15th October 2016 01:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ramarpillai

    மோசடி வழக்கில், ராமர் பிள்ளை உள்பட 5 பேருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்தவர் ராமர்பிள்ளை. இவர் அரிய வகை மூலிகைகளால் பெட்ரோலை தயாரித்ததாக 1999-ஆம் ஆண்டு அறிவித்தது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், மூலிகையில் தயார் செய்யப்பட்டது கிடையாது என கூறினர்.
    இதையடுத்து, "தமிழ்தேவி மூலிகை எரிபொருள்' என்ற நிறுவனத்தை தனது வளர்ப்புத் தாய் வேணுதேவி பெயரில் பதிவு செய்து, முகவர்கள் வாயிலாக விற்பனை நிலையங்களை திறந்தார். சென்னையில் 15 நிலையங்கள் திறக்கப்பட்டன.
    இங்கு பெட்ரோல் நிரப்பிய வாகனங்கள் பழுதடைந்ததாக எழுந்த புகார்களின்பேரில் சிபிஐ போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், நாப்தா, தொலுயீன், பென்சீன் உள்ளிட்ட பல்வேறு வேதிப்பொருள்களால் பெட்ரோல் தயாரித்து ரூ.2.27 கோடி மோசடி செய்ததாகக் கூறி, ராமர் பிள்ளையை 2000-ஆம் ஆண்டு மார்ச் 11-இல் கைது செய்தனர். மேலும், அவருக்கு உதவியாக இருந்த ராமர்பிள்ளையின் வளர்ப்புத் தாய் ஆர்.வேணுதேவி, நிறுவன ஊழியர்கள் எஸ்.சின்னசாமி, ஆர்.ராஜசேகரன்,எஸ்.கே.பாரத் ஆகியோர் மீதும் சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். 60 நாள் சிறைவாசத்துக்கு பின்னர், ராமர்பிள்ளை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
    இந்த வழக்கு எழும்பூரில் உள்ள சென்னை பெருநகர கூடுதல் முதன்மை குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், ராமர் பிள்ளை, வேணுதேவி, சின்னசாமி, ஆர்.ராஜசேகரன், எஸ்.கே.பாரத் ஆகிய 5 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பாலசுப்பிரமணியம் தீர்ப்பளித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai