Enable Javscript for better performance
2 அமைச்சர்களுடன் மு.க.ஸ்டாலின் திடீர் சந்திப்பு: காவிரி விவகாரம் தொடர்பாக சந்தித்ததாக அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    2 அமைச்சர்களுடன் மு.க.ஸ்டாலின் திடீர் சந்திப்பு: காவிரி விவகாரம் தொடர்பாக சந்தித்ததாக அறிவிப்பு

    By DIN  |   Published on : 15th October 2016 01:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    dmk

    அமைச்சர்களுடனான சந்திப்பு குறித்து, நிருபர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். உடன், எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், திமுக எம்எல்ஏக்கள் க.பொன்முடி, மா.சுப்பிரமணியன், பி.க

    தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். கூட்டத்துக்குப் பின்னர், காவிரி விவகாரம் தொடர்பாக அமைச்சர்களை சந்தித்ததாக ஸ்டாலின் தெரிவித்தார்.
    சென்னை தலைமைச் செயலகத்துக்கு வெள்ளிக்கிழமை காலை வந்த மு.க.ஸ்டாலின், சிறிது நேரம் காத்திருப்புக்கு பின்னர் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் அறைக்கு சென்றார். இதைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வத்தின் அறைக்கு, அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வந்தார்.
    சுமார் 20 நிமிடங்கள் வரை இந்தச் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, அமைச்சர்கள், தலைமைச் செயலரிடம் திமுக சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாய சங்கப் பிரதிநிதிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அடங்கிய நகலை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
    அப்போது, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், திமுக எம்எல்ஏக்கள் க.பொன்முடி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு கு.க.செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
    "காவிரி விவகாரத்துக்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவை'
    இதையடுத்து, மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-
    தமிழகத்தை சேர்ந்த பல்வேறு விவசாய அமைப்புகளை அழைத்து காவிரி விவகாரம் குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தி, அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், நிதியமைச்சரை வெள்ளிக்கிழமை சந்தித்தோம்.
    விவசாய சங்க நிர்வாகிகளின் கையெழுத்துகள் அடங்கிய தீர்மானத்தின் நகல் அளிக்கப்பட்டது.
    அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும், சட்டப் பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்டி தீர்மானத்தை நிறைவேற்றிட வேண்டும், அனைத்துக் கட்சி தலைவர்கள், விவசாய சங்க நிர்வாகிகளை தில்லிக்கு அழைத்துச் சென்று பிரதமரை சந்தித்து, மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் எங்களிடத்தில் உறுதிமொழி அளித்திருக்கிறார்கள் என்றார்.
    இதையடுத்து, "நீண்ட காலமாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் எனவலியுறுத்திக் கொண்டு இருக்கிறீர்கள். ஆனால், நீதிமன்றத்தின் மூலம் மட்டுமே தீர்வு என்பது அரசின் நிலைபாடாக இருக்கிறதே?' என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
    இதற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், "நீதிமன்றத்தில் சட்டரீதியாக சந்திக்கலாம். ஆனால், எப்படி கர்நாடகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து இந்த விவகாரத்தில் தங்களுடைய உணர்வை வெளிப்படுத்துகிறார்களோ, அந்த உணர்வை தமிழக மக்களும் வெளிப்படுத்தக்கூடிய வகையில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்ற அடிப்படையிலேதான் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம்' என்றார்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai